பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படம் அப்போது செம்ம ஹிட் கொடுத்தது. அப்படத்தில் டாக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்த சத்யஜித் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமா துறையில் கால் பதித்துள்ளார்.
16 வயதினிலே படத்தில் கமலஹாசன், ஸ்ரீ தேவி, ரஜினிகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் வெளி ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு டாக்டராக வரும் சத்யஜீத் மேல் ஸ்ரீ தேவி காதல் கொள்வார். இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் டாக்டர் ஸ்ரீ தேவியை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார். பின் ஸ்ரீ தேவியை அடைய வேண்டும் என்றிருந்த ரஜினியைக் கொன்றுவிட்டு கமல் ஜெயிலுக்கு சென்று விடுவார். கடைசியில் கமலுக்காக வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ தேவிக் காத்திருப்பதாக படம் முடியும்.
இந்த படத்தில் நான்கு கதாப்பாத்திரங்களில் தான் கதைக்களம் நகரும். டாக்டர், மயிலு, சப்பாணி, பரட்டை ஆகிய கதாப்பாத்திரங்கள்தான் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தன. பாரதிராஜாவின் முதல் படமே ஹிட் கொடுத்துவிட்டது.
அந்த படத்தில் டாக்டராக நடித்த சத்யஜித், கமல், ரஜினி போல் அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுத்து சினிமாவில் பெரிய இடத்தில் வலம் வருவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் அந்த படத்திற்குப் பிறகு ஒரே ஒரு சீரியல் மட்டும்தான் நடித்தார். அவ்வளவுத்தான், அதன்பின்னர் சினிமாவில் அவர் இருந்த இடமே தெரியாமல் ஆனது.
அந்தவகையில் சத்யஜித் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேட்டிக் கொடுத்தார். அதில் தனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள் என்றும் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது, மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே தனக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். அந்த ஆசை 48 வருடங்களுக்குப் பிறகு இப்போது நிறைவேறி வருகிறது. அவர் ஒரு கன்னடப் படத்தை இயக்கி வருவதாகவும் அது தமிழிலும் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.