
பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாக அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரவிக்குமார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கே.எம்.கே.மேனன் மற்றும் நடிகர் பாரதி மேனனுக்கு மகனாகப் பிறந்தார்.
இவர், 1968-ம் ஆண்டு ‘லக்ஷப்பிரபு’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1977-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் தமிழில் ‘அவர்கள்’ என்ற படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக ‘பரணி’ என்ற கதாபாத்திரத்தில் இவரை அறிமுகம் செய்தார். இந்த படத்தில் நடிகர் ரவிக்குமார் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சுஜாதா உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்.
இவர் அங்காடி, தச்சோளி அம்பு, லிசா, அலாவுதீனும் அற்புத விளக்கும், உல்லாச யாத்ரா, ஈ மனோகர தீர்த்தம், அவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
1970 முதல் 1980 வரை திரையில் கதாநாயகனாகவும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்ததுடன், அதற்குப் பின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தார். மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
1997-ம் ஆண்டில், நடிகர் ரவிக்குமார் ராஜ் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் தொடரில் நாகாவின் ‘ஐயந்திர பறவை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பாலசந்தர் இயக்கிய மரபுக்கவிதைகள் தொலைக்காட்சி தொடரில் நடித்து பெரும் புகழ்பெற்ற இவர், அதன் பிறகு ஏராளமான தமிழ், மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரவிக்குமார் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். நடிகர் ரவிக்குமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் மறைந்த நடிகர் ரவிக்குமாருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.