கணவரை பறிகொடுத்த பின், ஆடவரோடு ஜோடி சேர்ந்து நடிக்காத வெண்கல குரல் திரைநாயகி!

செப்டம்பர் 19 - கே. பி. சுந்தராம்பாள் நினைவு தினம்
K. B. Sundarambal
K. B. Sundarambal
Published on

இன்றைய தமிழ் சினிமாவில் உச்ச பட்ச சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1934 ஆம் ஆண்டிலேயே  9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கினார் ஒரு நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவர்தான் கே. பி. சுந்தராம்பாள். கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதே இவரது முழு பெயர்.

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரான இவர், தான் நடித்த திரைப்படமான பக்தி நந்தனார் என்ற திரைப்படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாராம். அன்றைய காலகட்டத்தில் அவர் வாங்கிய ஒரு லட்சம் என்பது இன்று 9 கோடி முதல் 25 கோடி வரை மதிப்புடையதாக சொல்லப்படுகிறது!!

1939 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் பேசும் படம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்த திரைப்படம் தான் பக்த நந்தனார். இந்தப் படத்தில் கே பி சுந்தராம்பாள் நந்தனராக ஆண் வேடமிட்டு நடித்தார். கிட்டத்தட்ட 41 பாடல்கள் இடம் பெற்ற இத்திரைப்படத்தில் 19 பாடல்களை இவரே பாடியிருப்பார்.

தன்னுடைய சிறு வயதில் பசியின் காரணமாக கோவில்களில் அமர்ந்திருந்த கே.பி சுந்தராம்பாள் அங்கு பாடப்படும் பாடல்களை கேட்டு பெற்ற கேள்வி ஞானத்தால் 8 வயதிலேயே பாடல்களை பாட ஆரம்பித்தார். ரயில் நிலையங்களில் பாடல்களை பாடி கொண்டிருந்தவர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனித்துவமான குரல் வளத்தால் காண்போரை வியக்க வைக்கும் இவர், நல்லதங்காள், வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற பல்வேறு நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தன்னுடைய 25ஆவது வயதிலேயே கணவரை பறிகொடுத்த கே பி சுந்தராம்பாள், அதற்குப் பின் எந்த ஆடவரோடும் சேர்ந்து ஜோடியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல், கடைசி வரை துணை இல்லாமல் தனித்துவமான கதாபாத்திரங்களிலே  நடித்து வந்தார்.

இவர் நடித்த மணிமேகலை என்ற திரைப்படத்தில் மணிமேகலை என்னும் துறவி வேடத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்திலும் கிட்டத்தட்ட 11 பாடல்களை  இவரே  பாடினார்.

கே பி சுந்தராம்பாளை  பக்தர்களிடம் மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா" என்ற பாடல் தான். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய இப் பாடலை  மிகவும் உயிர்ப்போடு பாடி இருப்பார் சுந்தராம்பாள். காரைக்கால் அம்மையார் என்ற படத்தில் "தக தகவென ஆடவா" என்ற பாடலும் இன்று வரை ரசிகர்களால் மிகவும் விரும்பப்படக்கூடிய ஒரு பக்தி பாடல்.

கந்தன் கருணை என்ற படத்தில் அவ்வையார் வேடமிட்டு நடித்திருப்பார் கே பி சுந்தராம்பாள். அன்றைய காலகட்டங்களில் ஔவையாரினை  நன்கு அறியாதவர்கள்  கே பி சுந்தராம்பாள் தான் உண்மையான ஔவையார் என்று புரிந்து கொண்டதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 
K. B. Sundarambal

தமிழ் சினிமாவில் கதாநாயகன் கதாநாயகி இல்லாமல் ஒரே ஒரு துறவறப் பெண்ணை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்ட படம் தான் ஔவையார். சிறு வயதில் இருந்தே விநாயகப்  பெருமான் மீது மிகுந்த பற்று கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை முதுமை அடையும் வரை முழுமையாக காட்டும் விதமாக அமைந்தது இந்த ஔவையார் படம். தன்னுடைய தனித்துவமான குரலாலும், தனது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பை போல் உணர்ந்ததாலும் கே பி சுந்தராம்பாள் இத்திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.

நாடாளும் அரசனுக்கு என்ன வேண்டும்? அரசனுக்கு கீழ் வாழும் குடிகளுக்கு என்ன வேண்டும்? என்பதை  வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மிகவும் அற்புதமாக கடத்திச் சென்றிருப்பார் கே பி சுந்தராம்பாள். ஒரு காட்சியில் அரசனிடம் பேசும்போது  ஒரு நாட்டின் வளம் எதைப் பொறுத்து அமையும்  என்பதை

"வரப்பு உயர நீர் உயரும் 

 நீர் உயர நெல் உயரும் 

 நெல் உயர குடி உயரும்

 குடி உயர கோ உயர்வான் "

என்று ஒரு அரசனுக்குரிய இலக்கணம் என்ன? என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து இருப்பார் கே பி சுந்தராம்பாள்.

பூம்புகார் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞரின் வசனத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் கவுந்தியடிகள் வேடமிட்டு  நடித்திருப்பார். முருக பக்தையான கே பி சுந்தராம்பாள் சமண துறவியைப்  போல் வேடமிட்டு  வாழ்க்கையின் தத்துவத்தை உயர்த்தும் வண்ணமாக பாடும் "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" என்ற பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதையும் படியுங்கள்:
இதனால்தான் என் முடி போச்சு – மொட்டை ராஜேந்திரன்!
K. B. Sundarambal

காளிதாஸ் படத்தில் காளி வேடத்தில்  நடித்தார். துணைவன் படத்தில் "கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது " என்ற பாடலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இப்பாடலுக்கு தேசிய விருது பெற்றார்.

கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "அரியது எது?கொடியது எது?பெரியது எது?" என்று கேள்வி பதில் போல் அமைந்த பாடல் தமிழ் மொழியின் சிறப்பையும் மனித வாழ்க்கையின் இலக்கணத்தையும் அற்புதமாக உணர்த்தும் பாடலாக அமைந்தது.

தன்னுடைய தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் மிகச் சிறப்பாக நடித்த கே பி சுந்தராம்பாள்  தமிழ் சினிமாவில் 12 படங்கள் மட்டுமே நடித்தார். இந்த 12 படங்களிலும் அதிகமாக இடம் பெற்றவை பக்தி படங்களே. பக்தி பாடல்களில் தனித்து நிற்கும் குரலாக கே பி சுந்தராம்பாளின் குரல் இன்னும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com