மகாராஜா படம் விமர்சன ரீதியாக உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்தப் படத்தில் முதலில் நடிப்பதற்கு சாந்தனுவிடமே பேசப்பட்டதாக இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா படத்தை இயக்கினார். இப்படத்தை படக்குழு பெரியளவில் ப்ரோமோஷன் செய்தது. விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. கடைசியாக அவர் வில்லனாக நடித்தப் படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்தன. அதேபோல், அவரது கதாபாத்திரமும் அதிகளவில் பேசப்பட்டன.
இதனையடுத்து தற்போது மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஒரு தாறுமாறான கம்பேக்காக அமைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையைக் கிளப்பியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் இப்படம் குறித்து அதிகம் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து தமிழ் சினிமாவின் தரத்தைப் போற்றினர். அதேபோல் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படமாக மகாராஜா படம் உள்ளது.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அவ்வளவு தாறுமாறாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரு நடித்திருந்தாலும், அவ்வளவு செட்டாகி இருக்காது என்றும் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நித்திலன் சாமிநாதன் மகாராஜா கதை விஜய் சேதுபதிக்கு எழுதப்பட்ட கதை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த கதைக்கு ஹீரோவாக முதலில் சாந்தனுவை தான் தேர்வு செய்ததாகவும் கூறினார்.
அந்தவகையில், நடிகர் சாந்தனு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை . அப்பாவிற்கு இயக்குனர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.