டி.ராஜேந்தர் எனும் உயிரிசைக் கலைஞர்!

(70ஸ் கிட்சின் பார்வையில்)
T.Rajendar
T.Rajendar
Published on

திரை இசைப்பாடல்கள் மனதிற்கு அமைதியையும், மகிழ்வையும், நிறைவையும் தருவதோடு மட்டுமல்லாமல், உடல், மன நோய்களுக்கு மருந்தாகவும் அமைவதுண்டு!

அதே நேரத்தில் சில நேர்வுகளில் எதிர்மறையாகச் செயல் புரிவதும் உண்டு. காதலில் தோல்வியுற்ற சில சஞ்சல மனங்களை, சில பாடல்கள் மேலும் வலிக்கு ஆளாக்குவதும் உண்டு.

சினிமாப் பாடல்களே இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்து பார்த்தால்... வியப்பே மிஞ்சுகிறது! அப்படி இந்தப் பூமி உருண்டை இல்லை என்பதுதானே நிதர்சனம்!

கண்ணதாசன் சொல்வார்!: எனக்குக் கிடைத்த பெருமையெல்லாம்…... நான் உயிரோடு இருக்கும் போதே என் பாடல்கள் எல்லா இடங்களிலும் என் காது பட ஒலிப்பதுதான்! என்று.

உண்மைதான்… மிகச் சிலருக்கே அவர்கள் உயிருடன் இருக்கும்போதே புகழ் மாலைகள் சூட்டப்படுகின்றன. பலரின் தியாகங்களும், ஈடில்லா உழைப்பும் அவர்களின் இறப்புக்குப் பிறகே போற்றப்படுகின்றன. மிகப் பலரின் சமூக நலத் தொண்டுகள், காற்றில் கலக்காமலும் நம் காதுகளை அடையாமலுமே மறைந்து போகின்றன.

விஜய் தேசிங்கு ராஜேந்தர் (டி.ஆர்.) 1955 ல் பிறந்து, தனது 25 வயதிலேயே மனதை வருடும் காதல் பாடல்களால் நம்மைக் கட்டிப் போட்டவர் என்பதுதான் சிறப்பே!

      -கதாசிரியர்;

      -பாடலாசிரியர்;

      -இசை அமைப்பாளர்;

      -தயாரிப்பாளர்;

      -வசனகர்த்தா;

      -பல நடிகர்,நடிகைகளை அறிமுகப் படுத்தியவர்;

      -அரசியல்வாதி;

      -சொந்தக் கட்சி நடத்தியவர்;

      -எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்; மற்றும்

      -அடுக்குமொழிப் பேச்சாளர் என்ற அனைத்தையும் கடந்து,

'இசையையும், தாளத்தையும் தன் குரலாலேயே உணர்த்தும் வல்லமை படைத்தவர்' என்பதுதான் கூடுதல் சிறப்பு!

உணர்வோடும் உயிரோடும் இசை ஒன்றரக் கலந்தவர்களால் மட்டுந்தானே இத்தகைய அற்புதத்தை நிகழ்த்த முடியும். எனவேதான் அவரை உயிரிசைக் கலைஞர் என்றோம்.

அவர் எழுதி இசையமைத்த சில பாடல்களின் சில வரிகளை மட்டும் இங்கு ரசிப்போமே!

நூலுமில்லை வாலுமில்லை 

வானில் பட்டம் விடுவேனா?

நாதியில்லை தேவியில்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா?

உண்மைதானே! பட்டம் விட நூலும், அது பாலன்ஸ் செய்து பறக்க வாலும் எப்படித் தேவையோ அது போலதான் உறவும், உரியவளும். அது இல்லாத வாழ்வு சிறக்காதுதானே!

 அதே பாடலில் உச்சரிப்புக் கலையையும் உணர்த்தும் விதமாக,

 பூத்தால் மலரும் உதிரும் 

நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை!

நிலவும் தேய்ந்து வளரும் 

அவள் நினைவோ தேய்வதில்லை!

என்ற வரிகளை டி.எம்.எஸ். குரலில் கேட்கையில் சோகத்திலும் ஒரு சுகம்!

கிளையில்லா மரங்களில் 

நிழல் தேடும் மனங்களே!

அழிவில்லாக் காதலில்

அழிகின்ற மலர்களே!

 என்று ஆரம்பிக்கும் பாடலில்,

காதல் ஒரு வழிப் பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

காதல் ஆற்றிட முடியாக் காயம்!

என்கிறார். மெய்தானே! காதல் பசுமரத்தாணி போன்று இதயத்தில் இறங்கி விடுவதல்லவா?

மேலும் சொல்கிறார்:

மேகங்கள் போட்டிடும் கோலம்

அது காற்றினில் கலைந்திட சோகம்!

காலைக் கதிரவன் அழித்திடும் பனி போல் 

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ?

காற்றாய், கதிரவனின் ஒளியாய் இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் காதல் எப்படி இருக்கும், இருக்க வேண்டுமென்று இலக்கணம் வகுக்கிறார்!

கோடையில் பாய்ந்திடும் நதிகள்

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கதை சாகின்ற வரையிலும் தொடரும் 

கட்டை வேகின்ற போதும் மலரும்!

உடல் சாம்பலாகிக் காற்றில் கலந்தாலும் காதலோடே அது கலக்க வேண்டுந்தானே!

இது போன்ற பாடல்களைக் கேட்கையில் இதயம் இளமையை அசை போடுதல் இயல்புதானே!

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கொட்டுக்காளி -  ஒலியும் ஒளியும் ஓஹோ... படம் முடிவு ஸோ ஸோ!
T.Rajendar

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, சென்னை வானொலி நிலையத்தில் ஞாயிறு மாலைகளில் ‘ஒலிச் சித்திர’மும், புதன் இரவுகளில் ‘நீங்கள்கேட்டவை’ நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும்.

முன்னதை, நண்பர்களோடு சேர்ந்து கேட்போம். அதிலும் பார்த்த படம் என்றால் ஆர்வம் அதிகரித்து விடும்.

பின்னது இரவு 10 மணியிலிருந்து 11 வரை என்பதால் தனித்தும் கேட்பதுண்டு.

அப்படித்தான் ஒரு புதனன்று கேட்ட அது இன்றும் பசுமையாய் எம் இதயத்தில்!

அன்று பௌர்ணமி வேறு! பாட்டியின் கீற்று வேயப்பட்ட வீட்டு வாசலில் மணலை மலையாகக் கொட்டியிருந்தார்கள் - வீட்டு வேலைக்காக! அதில் கோரைப் பாயைப் போட்டபடி கூம்பு போன்ற அதன் மேல் பகுதியில் தலையை வைத்துக் கொண்டு, வானத்து முழு நிலவை முழுதாய் ரசித்துக் கொண்டு, மார்பின் மீது வைக்கப்பட்டிருந்த ட்ரான்சிஸ்டரிலிருந்து டி.எம்.எஸ். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை… என்னைச் சொல்லிக் குற்றமில்லை… காலம் செய்த கோலமடி…கடவுள் செய்த குற்றமடி! என்று பாடியதைக் கேட்ட அனுபவத்தை... கட்டை வேகும் வரை மனது அசை போடும் போலும்!

சாந்தி என்பது மன அமைதியையும் ஒரு பெண்ணின் பெயர் என்பதையும் மட்டுமே நாம் அறிவோம்!

அதைக் கொண்டே ஓர் அழியாத பாடலைக் கட்ட டி.ஆ. ரால் மட்டுந்தானே முடியும்!

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி?

உன் பிரிவினில் ஏதடி சாந்தி 

உன் உறவினில் தானடி சாந்தி!

இந்த உயிரிசைக் கலைஞரால் எழுதவும் இசையமைக்கவும்பட்ட பல காதல் பாடல்கள், காதலும் காதலர்களும் வாழும் வரை உலகில் நின்று உலவும் என்பதில் சந்தேகமேயில்லை!

இதையும் படியுங்கள்:
பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸின் அடுத்த திரைப்படம்!
T.Rajendar

வைகைக் கரைக் காற்றே நில்லு…

வஞ்சிதனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கைதனைத் தேடுதென்று….

நம் உயிரிசைக் கலைஞருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நிம்மதியான வாழ்வையும் வழங்கட்டும்! வைகைபோல் காவிரிபோல் அவர்தம் வளம் ஓங்கட்டும்!

- ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com