

ஷோலே தி ஃபைனல் கட் - பிரபல பாலிவுட் திரைப்படமாகிய ஷோலேயின் மீட்டெடுக்கப்பட்ட பதிப்பு ஆகும். 1975 ஆம் வருடம் ஷோலே திரையிடப்பட்டது. ஷோலே தி ஃபைனல் கட், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.
முன்னோட்டம்:
தந்தை G.P. Sippy தயாரிப்பில், தனயன் ரமேஷ் சிப்பி இயக்கத்தில், 1975 ஆம் வருடம் வெளியான இந்தி திரைப்படமாகிய ஷோலே, அதன் வசனங்கள் மற்றும் பாடல்களுக்காக பர-பரப்பாக பேசப்பட்டது. ஸலீம் ஜவேதின் கதை-வசனம் மற்றும் ராகுல்தேவ் பர்மனின் இசையமைப்பு பாராட்டப்பட்டது.
ஷோலே படம் பார்த்துவிட்டு வந்த அலுவலக நண்பர்கள் பலரும், மதிய உணவு இடைவேளையில்,
"அர்ரே ஓ சம்பா! கித்னே ஆத்மி தே?"
"ஏ ஹாத் முஜே தே தோ தாகூர்!"
"ஜோ டர் கயா, ஜம்ஜோ! ஓ மர் கயா!"
"தேரே க்யா ஹோகா காலியா..?"
"ஹம் காம் சிர்ஃப் பைஸே கேலியே கர்தே ஹை"
"சலோ தன்னு! ஆஜ் தேரி பஸந்தி கி இஜ்ஜத் கா சவால் ஹை!"
"ஏ தோஸ்தி ஹம் நஹி தோடேங்கே!"
என்று ஷோலே பட வசனங்களைப் பேச, பாடல்களைப் பாட, நாங்களும் ஷோலே படம் பார்க்க ஆவலுடன் தியேட்டருக்கு 1975 ஆம் வருடம் சென்றோம். சுமார் 3 1/2 மணி நேரத் திரைப்படம். விறு-விறுப்பாக சென்றது.
ஷோலே திரைப்படத்தின் கதை:
ஷோலே படம் அனைவரும் ரசித்த பாலிவுட் படம். நட்பு, காதல் மற்றும் பழிவாங்கலின் காலத்தால் அழியாத கதை ஷோலே. இப்படத்தில், தாக்கூர் பல்தேவ் சிங் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரி, தன்னைத் தாக்கிய இரக்கமற்ற கொடூரமான கொள்ளைக்காரன் கப்பர் சிங்கைப் பிடிக்க, குற்றவாளிகளாகிய ஜெய் மற்றும் வீருவை பணியமர்த்துகிறார்.
எதிரும்-புதிருமாக இருந்த ஜெய்யும் வீருவும் காரியத்தில் இறங்குகையில், சிறந்த நண்பர்களாக மாறி விடுகின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஜெய்யும், வீருவும் வன்முறை மற்றும் துரோகத்தின் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். கப்பர்சிங் அவர்களை சிறையில் அடைத்து விடுகிறான். அநேக திக்-திக் மற்றும் சுவாரசியமான திருப்பங்களுக்குப் பிறகு, கொள்ளைக்காரன் கப்பர்சிங் கைது செய்யப் படுகிறான்.
ஷோலே திரைப்படக்கதையின் ஒரிஜனல் (அசல்) முடிவு மற்றும் மாற்றப்பட்ட காரணம்:
அசல் படத்தின் முடிவில், தாக்கூர் தனது கைகளை வெட்டி, தனது குடும்பத்தைக் கொன்றதற்கு பழிவாங்கும் செயலாக, கூரான காலணிகளைப் பயன்படுத்தி கப்பர் சிங்கைக் கொல்வது போல் எடுக்கப் பட்டிருந்தது.
ஆனால், 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் அவசரநிலை காலத்தில் ஏற்பட்ட தணிக்கை சிக்கல்கள் காரணமாக, தாக்கூரால் கப்பர்சிங் கொடூரமாக கொல்லப் படுவதற்குப் பதிலாக, கப்பர் சிங் கைது செய்யப்படுவதாக காட்ட எண்ணி முடிவு மாற்றப்பட்டது.
ஷோலே தி ஃபைனல் கட் படத்தின் திருப்பம்:
ஷோலே தி ஃபைனல் கட் படத்தின் அசல், ஒரிஜினல் கிளைமாக்ஸைக் கொண்டுள்ளது. அதாவது, தாக்கூர் தனது கூர்முனை காலணிகளைப் பயன்படுத்தி கப்பர்சிங்கை கடுமையாக காயப்படுத்தி, இறுதியில் அவரைக் கொன்றுவிடுகிறார். இந்த மீட்டெடுக்கப்பட்ட பதிப்பு 4K மறுசீரமைப்பு மற்றும் டால்பி 5.1 ஒலியுடன் படத்தின் அசல் பார்வையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஷோலே தி ஃபைனல் கட் படத்தின் மறு வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. படத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. அதன் காவியக் கதைக்களம், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் (அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேம மாலினி, அம்ஜத்கான், சஞ்சீவ் குமார், ஜெயா பச்சன்), புரட்சிகரமான ஒளிப்பதிவு மற்றும் பாடல்கள் மூலம், ஷோலே தலைமுறைகளைத் தாண்டி, பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து இழுப்பது நிதர்சனம்.
உபரி தகவல்கள்:
இந்திய திரைப்பட வரலாற்றில் அதிகமாக வசூல் செய்த படங்களில் ஷோலேயும் ஒன்றாகும்.
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஆவது பிலிம்ஃபேர் விருது விழாவில், ஷோலே 50 ஆண்டுகளில் தலை சிறந்த படமெனக் குறிப்பிடப் பட்டது.
பாகிஸ்தான் நாட்டில் முதன் முதலாக, 2015 - இல் ஷோலே திரைப்படம் வெளியிடப்பட்டது.
50 வருடங்களுக்குப் பிறகு (12/12/2025) வெளியிடப் படவிருக்கும் ஷோலே தி ஃபைனல் கட் டைக் காண சஞ்சீவ்குமார் (தாக்கூர்), தர்மேந்திரா (வீரு), அம்ஜத்கான் (கப்பர்சிங்) மூவரும் இன்று மிஸ்ஸிங்.
"அர்ரே ஓ சம்பா! கித்னே ஆத்மி தே?"
"ஜோ டர் கயா, ஜம்ஜோ! ஓ மர் கயா!"
"தேரே க்யா ஹோகா காலியா?"
போன்ற ஷோலே வசனங்களை மீண்டும் வெள்ளித்திரையில் கேட்கவும், நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் கனவுக்கன்னி ஹேமமாலினியைக் காணவும், வழிமேல் விழிவைத்து 'ஷோலே தி ஃபைனல் கட்' காண, நாங்கள் காத்திருக்கிறோம். நீங்க..?