

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது அடுத்த படமான அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை கதையை மையமாகக் கொண்டு, கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்க, வட சென்னை திரைப்படத்தில் நடித்த சில முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன் உடன் தக்லைஃப் படத்தில் நடித்த சிம்பு, தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் அரசன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கிறார் என்பதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய் சேதுபதி போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அரசன் திரைப்படத்தில் இள வயது சிம்புவை காட்ட 12 கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். இதனை அடுத்து உடல் எடை குறைப்பு முயற்சியிலும், சண்டைப் பயிற்சியிலும் சிம்பு ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பொல்லாதவன் தொடங்கி கடைசியாக வெளிவந்த விடுதலை பாகம் 2 வரை வெற்றிமாறன் இயக்கிய அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் அரசன் திரைப்படமும் வெற்றிவாகை சூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, தனது எக்ஸ் பக்கத்தில் ‘மனிதன் இணைகிறது மகத்துவம் தெரிகிறது’ என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியும், சிம்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு பின்பு அரசன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் இருவரும் இணைவதால், அரசன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயமாக டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் அரசன் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.