
கடந்தாண்டு நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைள், நடிகர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், இது மலையாளத் திரையுலகில் #MeToo இயக்கத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் பாலியல் புகார் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து கேரள நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் போட்டியிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் இதில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (AMMA)வின் தலைவியாக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
32 ஆண்டுகால மலையாள நடிகர் சங்க வரலாற்றில், பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். அதேபோல பொதுச்செயலாளராக குக்கூ பரமேஸ்வரன், இணை செயலாளராக அன்ஷியா ஆகியோர் தேர்வானார்கள்.
ஸ்வேதா மேனன் கடும் எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் கடந்து இந்த தேர்தலில் வென்றுள்ளார். அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோதே, சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். வேட்புமனுவில் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்றும் வழக்கு தொடுத்தனர்.
சமீபத்தில் கூட, ஸ்வேதா மேனன் ஆபாசமாக நடிப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடுத்தார். ஆனால், அனைத்து சவால்களையும் ஸ்வேதா மேனன் உறுதியாக எதிர்கொண்டு, நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து, தனது தரப்பு நியாயத்தை நிரூபித்து, இறுதியில் கேரள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் நின்று வென்று காட்டியுள்ளார் ஸ்வேதா மேனன்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்வேதா மேனன் தமிழில் ‘நான் அவன் இல்லை -2', ‘துணை முதல்வர்', ‘அரவான்' ‘சிநேகிதியே’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக நடிகை ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.