

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் திரையுலகில் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய நடிகர்கள் சிம்புவும் தனுஷும் . தனுஷை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமைக் கொண்டவர் வெற்றிமாறன் . இவர்களின் கூட்டணியில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியை பெற்றவை , அதுமட்டுமல்லாது சில தேசிய விருதுகள் மற்றும் மற்ற சினிமா சார்ந்த விருதுகளை பெற்றுள்ளவவை.
சிலம்பரசன் எப்போதும் இளைஞர்களை கவரும் வகையிலேயே தனது கதைக் களத்தை தேர்ந்தெடுப்பவர். பெரும்பாலும் ஜனரஞ்சக சினிமாவாகவே சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள் இருக்கும். படம் முழுக்க ஏராளமான பஞ்ச் வசனங்களும் அளவுக்கு அதிகமான ஹீரோயிசமும் இவரது படங்களில் இயல்பாக இருக்கும். ஆனால் , வெற்றிமாறன் உருவாக்கும் திரைப்படங்களில் ஹீரோயிசம் சார்ந்த காட்சிகள் மற்றும் மிகையான பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இடம்பெறாது.
அவரது படங்கள் மிகவும் யதார்த்தமாகவும், சமூகத்தின் வாழ்வியலை நேரில் படம்பிடிப்பதை போலவும் காட்சிகள் அமைத்து இருப்பார். இப்படி ஒருவருக்கொருவர் நேர் எதிரான அடிப்படையில் வந்தவர்கள், ஒரு திரைப்படத்தில் இணையும் போது அதற்கான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
அரசன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் கிஷோர் , ஆண்ட்ரியா , சமுத்திரக்கனி உள்ளிட்ட வட சென்னை திரைப்படத்தில் நடித்த ஏராளமான நடிகர்கள் இந்த திரைப்படத்திலும் நடித்துள்ளனர். வட சென்னை யுனிவர்சிலிருந்து இந்த கதைக்களம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
வெந்து தணிந்தது காடு , பத்து தல , தக் லைஃப் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் சிம்பு ரவுடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் இந்தப் படத்தின் கதைக் களம் , சிம்புவின் முந்தைய திரைப்படத்தின் பிரதிபலிப்புகள் எதுவும் இருக்காது என்று நம்பலாம்.
அரசன் படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர் வெற்றிமாறனின் முந்தைய திரைபடமான விடுதலை மற்றும் அதன் அடுத்த பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வடசென்னை திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் , அந்த திரைப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது வட சென்னை யுனிவர்சான அரசனில் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தீபாவளிக்கு முன்னர் படத்தின் எடிட்டிங் ,டப்பிங் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்ய காத்திருக்கிறது. இந்த தீபாவளி சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்பதில் வேறு கருத்தில்லை.