
சினிமா நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கண்டிப்பதாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரின் இந்த பேச்சுக்கு பாடகி சின்மயி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு சமூகவலைத்தளத்தில் கவனம்பெற்றுள்ளது.
பொதுவாக தனிமனித தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. தற்போதைய நவீன உலகத்தில் பெண்கள் பல்வேறு வகையில் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதிலும் சினிமா துறையில் உள்ள பெண் பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,சவால்கள் மிகவும் அதிகம்.
இந்த நிலையில் உடன் நடிக்கும் நடிகர்கள் கூட பெண் நடிகைகளை ஆபாசமாக பேசுவது அதிகரித்திருக்கிறது. சமீபத்தில்கூட மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய பேச்சு, கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. அதேபோல், நடிகைகள் விசித்ரா மற்றும் ராதிகா ஆப்தே போன்றோர் தங்களுடைய சக நடிகைகளால் பாலியல் ரீதியாக எதிர்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் Deep Fake மற்றும் ஆபாசமான விமர்சனம் மூலம் திரைத்துறை பெண் நட்சத்திரங்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வைரமுத்து, நடிகைகளை தவறாக விமர்சிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இது பெண்மைக்கு ஏற்படும் இழுக்கு, கலை உலக சகோதரிகளுக்கு ஏற்படும் தலைகுனிவாக நான் இதை கருதுகிறேன்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது. அதை நான் வரவேற்கிறேன். இனி உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முன், பின் இன்று இரண்டாக பிளவுபட போகிறது.
இப்படி பயனுக்காக ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு தீமையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது.இது மட்டுமல்ல நடிகைகள் மீதான அவதூறுகளும், விமர்சனங்களும், தவறான சித்தரிப்புகளும் கண்டிக்கப்பட வேண்டியவை” என்றார்.
இந்நிலையில், பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு தனது எக்ஸ் தளர்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். முன்னதாக, பாடகி சின்மயி #Metoo விவாகாரத்தின் மூலம் வைரமுத்து மீது குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், திரைத்துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புகாக ”பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு குழு (ICC) அமைக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து திரைதுறையில் பணியாற்றும் நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கண்டிப்பதாக தெரிவித்த கருத்துக்கு, எதிர்வினை ஆற்றும் வகையில் பாடகி சின்மாய் தனது எக்ஸ் பக்கத்தில் குபீரென்று ஒருவர் சிரிப்பது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வைரமுத்துவின் பேச்சை கிண்டல் செய்துள்ள பாடகி சின்மயின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம்பெற்றுள்ளது.