

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் ஸ்ரீதேவா. இவர் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு குதித்துள்ளார்.
ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கால் பதித்த அவர், அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுப்பன் திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் நடிப்பில் வெளியான வசூல் மன்னன் படம் உலகம் முழுவதும் வெளியானது.
கதாநாயகன் ஸ்ரீதேவா, வேலைக்கே செல்லாமல் சல்லி தனமாக ஊர் சுற்றி வரும் இளைஞராக வலம் வருகிறார். அது போக, ஊர் முழுவதும் கடனை வாங்கி வைக்கிறார். கடன்காரர்கள் வாழ்க்கை முழுவதும் அவரை துரத்த, அதற்கு பயந்து ஒளிந்துகொண்டே வாழ்க்கையை நகர்த்துகிறார். ஆனால் கடன் வாங்குவதை நிறுத்திய பாடில்லை. இப்படி இருக்கையில் போலீஸ் கனவுடன் எண்ட்ரி ஆகும் கதாநாயகியிடமும் பணத்தை பெற முயற்சி செய்கிறார் ஸ்ரீதேவா. ஆனால் ஒரு கட்டத்தில் கதாநாயகனின் உண்மை முகத்தை அறிந்த கதாநாயகி நிவேதா, போலீஸ் ஆன பிறகு ஸ்ரீதேவாவை பழிவாங்க முயற்சிக்கிறார். இதில் கதாநாயகன் எதற்கு கடன் வாங்குகிறார், அதை திருப்பி அடைப்பாரா, நாயகியுடனான சண்டை எப்படி காதலாக மாறும், இது திருமணம் வரை செல்லுமா என்பதே மீதிக்கதையாக இருக்கிறது. காமெடி கலந்த குடும்ப எண்டெர்டெயின்மெண்டாக இருப்பதால் குடும்பமாக சென்று தியேட்டரில் குதூகலிக்க இந்த படம் ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும்.
எம்.எல்.புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் தயாரிக்கும் இப்படத்தை ‘கன்னக்கோல்’ திரைப்படம் மூலம் சமூக பிரச்னைகளை நகைச்சுவையாக பேசி கவனம் ஈர்த்த இயக்குநர் வேல் குமரேசன், தனது இரண்டாவது படமாக இயக்குகிறார்.
இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவானாலும், அதன் பின்னணியில் மிக முக்கியமான விசயம் குறித்து இயக்குநர் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ தேவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா நடித்திருக்கிறார். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி, சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதி உள்ளார். இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதி உள்ளார். சிவகுமார் ஒளிப்பதிவையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், சரவணன் கலையையும், கவனித்துள்ளனர். ஈஸ்வர் தயாரிப்பு நிர்வாகத்தையும், ஜவஹர் மாரிமுத்து தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.
சமூகத்தில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இப்படி ஊர் முழுக்க கடனை வாங்கி வைத்து குடும்பத்திற்கு கஷ்டம் கொடுத்து வருவதையே சுட்டி காட்டியுள்ளனர். இதில் இருந்து அவர் எப்படி மீள்வார், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதே கதையின் கருவாக அமைந்துள்ளது.