

முதல் பாகம் வந்தபொழுதே சக்கைப்போடு போட்ட படம். பின்லாந்து நாட்டில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த ஒரு முன்னாள் ராணுவ வீரர். வயதானவர். அவருக்கும் ரஷ்ய ராணுவத்துக்கும் நடக்கும் ஒரு பிரச்சினையில் அவரைக் கொள்ள விரட்டுகின்றனர். தனியொரு ஆளாக நின்று போராடி வென்றது தான் முதல் பாகம்.
இரண்டாவது பாகத்தில் தான் வாழ்ந்த வீட்டுக்கு வருகிறார் ஆட்டாமி கோர்பி. (ஜோர்மா டொமில்லா) தன்னுடைய மனைவியும் இரண்டு மகன்களும் இல்லாத அந்த வீட்டின் வெறுமை அவரைத் தாக்குகிறது. அந்த மர வீட்டைப் பிரித்துக் கட்டைகளை தனது வண்டியிலேற்றி திரும்புகிறார். பழைய எதிரிகளான ராணுவத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளும், வில்லனும் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டத் துரத்துகிறார்கள். எப்படித் தப்பித்தார் என்பது தான் கதை.
இந்தப்படத்தின் இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர் ஆக்க்ஷன் கலந்து வன்முறை படம் எடுப்பதில் புதிய சாதனை படைத்து வருகிறார். ரத்தம் சொட்டச் சொட்டத் தலை வெடிப்பது, உடல் தெறிப்பது என அனைத்தும் அவரது பிடித்தமான காட்சிகள். இதிலும் அதே போல் தான். தொண்ணூறு நிமிடங்கள் ஓடும் படத்தில் பேசும் காட்சிகள் மொத்தம் பத்து நிமிடங்கள் தான். ஆக்க்ஷன் ஆக்க்ஷன் தான் மீதமெல்லாம். மோட்டார் சைக்கிள் மெஹெம் என்றோர் அத்தியாயம் வருகிறது. வித விதமாகக் கொல்கிறார். வித விதமாகச் சாகிறார்கள்.
நாயகனுக்கு அழிவே கிடையாது என்று வில்லன் சொல்கிறான். அதற்கேற்றாற் போல் என்ன பிரச்சனை வந்தாலும் துவம்சம் செய்கிறார். கிடைத்த வாகனங்களில் எல்லாம் சென்று எதிரிகளை அளிக்கிறார். பாம் டேங்கர் ஒன்றில் வந்து அவர் செய்யும் அட்டகாசம் சபாஷ். அதுவும் கடைசி நாற்பது நிமிட ரயிலில் நடைபெறும் க்ளைமாக்ஸ். பைட்டர் பிளேன்களை அவர் கையாளும் விதம் என்று அதகளம் செய்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ரயில் பெட்டியில் இருக்கும் ராணுவ வீரர்களை அவர் சமாளிக்கும் விதம் பேஷ்.
இப்படியும் நடக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்க வைக்காமல் அடேங்கப்பா என்று சொல்வது மாதிரி வைத்திருப்பது தான் திரைக்கதையின் சாமர்த்தியம். சண்டைப்பயிற்சி இயக்குனருக்கு ஒரு மிகப்பெரிய கைதட்டல்.
ரசிகர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள இப்படிச் சொல்லலாம். இது ஆங்கிலத்தில் வந்திருக்கும் பாலைய்யா படம். அந்த விதத்தில் ஹாலிவுட்டின் அகண்டா என்று சொல்லிக்கொள்ளலாம். வன்முறையும் சரி நம்ப முடியாத சண்டைக்காட்சிகளும் சரி. இது தான் நினைவுக்கு வரும். சண்டைப்பட ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்க ஒரு படம் தான் சிசு 2 (Sisu: Road to Revenge).
இதெல்லாம் இருக்க பாலையா நடிக்கும் அகண்டா இரண்டாம் பாகம் அடுத்த வாரம் வெளியாகிறது (டிசம்பர் 5) என்பது கூடுதல் தகவல்.