7 ஆண்டுகளாக சொன்ன சொல் மாறாத 'யூத் ஹீரோ' SK ... குவியும் வாழ்த்துகள்...

சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவிற்கான பணத்தை கட்டிவருகிறார்.
Sivakarthikeyan with Nel Jayaraman
Sivakarthikeyan with Nel Jayaramanimg credit - @erasaravanan
Published on

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்பட்ட நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் இரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற முயற்சியில், விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை தொடங்கிய ஜெயராமன், சுமார் 169 வகையான பாரம்பரிய மற்றும் அரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருதினைப் பெற்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 2018-ம்ஆண்டு சிகிச்சை பலனின்றி காலமானார். நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவ்வகையில், சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவிற்கான பணத்தை கட்டிவருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் குடும்பத்திற்காக செய்து வரும் உதவிகள் குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்த வரும் இந்த செயலுக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

எக்ஸ்தள பதிவில், ‘அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார். இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா.

நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன்.

அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி…’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வேகமாக வைரலான நிலையில் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்த உதவி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் இணைந்த படத்தின் பெயர் புறநானூறு இல்லை..!
Sivakarthikeyan with Nel Jayaraman

பல பிரபலங்கள் பெருமைக்காக நான் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் சில நாட்கள் அதை செய்து விட்டு விடுவார்கள். விதிவிலக்காக சில நடிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் அஜித், மறைந்த நடிகர் விவேக், மயில் சாமி போன்றோர் செய்த உதவிகள் வெளியில் தெரியாது. அந்த வகையில் தான் சொன்ன வாக்கை காப்பாற்றுவதற்காக கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் குடும்பத்திற்கு, சத்தம் இல்லாமல் சிவகார்த்திகேயன் செய்து வரும் உதவியை பாராட்ட வேண்டும். தொலைக்காட்சியில் மூலம் அறிமுகமாகி தனது வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து, தான் செய்யும் உதவியை வெளியில் சொல்லி தற்பெருமை கொள்ளாமல் அடக்கமாக, பணிவாக இருக்கும் சிவகார்த்தியேகனுக்கு பாராட்டுக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com