Puranaanooru movie
Puranaanooru movie

புறநானூறு படத்தில் இருந்து விலகிய சூர்யா? அவருக்கு பதில் இவரா?

Published on

புறநானூறு படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும், அதற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றிய சூரரைப்போற்று படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷிற்கும் அந்தக் கூட்டணி ஒரு லக்கி கூட்டணியாக அமைந்தது. இதற்காக 2022ம் ஆண்டுச் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்தப் படம், சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

விருதுகளையும் ரசிகர்களின் அன்பையும் வாரிக் குவித்துக்கொண்ட இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு உண்மைக் கதையில் இணைகிறார்கள் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பும் வெளியானது. அந்தவகையில் படத்தின் தலைப்பு 'புறநானூறு' என்றும், இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்தன. அதேபோல் இது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் 100 வது படம் என்று அவர் ட்வீட் செய்து உற்சாகத்தைத் தெரிவித்தார்.

அந்த அறிவிப்புகளுக்குப் பின்னர் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றக் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. ஆனால் இதற்கு முன்னரே சூர்யா பிஸியாக உள்ளதால் புறநானூறு படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமற்றச் செய்திகள் வந்தன. மேலும் கங்குவா படத்தில் சூர்யா தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
நானும் விஜயும் உண்மையாகவே அழுதுவிட்டோம் – குஷ்பு!
Puranaanooru movie

இதனையடுத்து புறநானூறு படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இணையத்தில் பட சூட்டிங் தள்ளிப்போவதற்கு வருத்தம் தெரிவித்தார். சூர்யா 43 படத்திற்காக போடப்பட்ட திட்டங்கள் சரியாக நடந்திருந்தால் இந்நேரம் படத்தின் இரண்டு செட்யூல்கள் நிறைவடைந்திருக்கும்.

அந்தவகையில் சூர்யா, சுதா கொங்கராவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் புறநானூறு படத்தை விட்டுவிட்டு அடுத்த ப்ராஜெக்ட்டில் இணையலாம் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறும் சூர்யா கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சூர்யாவின் இந்த ப்ராஜெக்ட்டிற்கு சுதா கொங்கரா நோ சொன்னதாகவும் தான் அடுத்ததாக புறநானூறு படத்தை தான் இயக்க உள்ளதாக அவர் உறுதியுடன் சூர்யாவிடம் பேசி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு 2டி என்டர்டைன்மெனட் நிறுவனமும் விலகிக் கொள்ள புதிய நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து முடித்தவுடன் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com