

நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இணைந்து பயணிப்பது கடினம் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்றிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட்டத்தின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து ரஜினி முருகன், சீமா ராஜா உள்ளிட்ட படங்களிலும் இணைந்து பணியாற்றினார். சீமா ராஜா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றுவது கடினம் என்று கூறி அவர் மீது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு இசையமைப்பாளர் டி இமான் அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பது. நடிகர் சிவகார்த்திகேயனோடு நான் இணைந்து பயணிக்க விரும்பவில்லை. தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் இனி நாங்கள் சேர்ந்து பயணிப்பது கடினமான காரியம். நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை வெளியே சொல்வது முடியாது. அந்த துரோகத்தை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். பிறகு நேரடியாக அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஜென்மத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பயணிப்பது முடியாது. அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இசையமைப்பாளர் டி இமானின் இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.