
குறும்படங்கள் இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர்கள் லிஸ்டில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவர். வாட்ஸ்அப் காதல் உட்பட பல குறும்படங்களைத் தயாரித்து தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு ‘கோமாளி' திரைப்படம் வாயிலாக இயக்குனராக மாறியவர், நடிகர் பிரதீப் ரங்கநாதன். மிகப்பெரிய ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு ‘லவ் டுடே' என்ற படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தார். ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்ததுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக இந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்' படமும், ரூ.100 கோடிக்கு அதிகமான வசூலைக் குவித்தது.
பிரதீப் ரங்கநாதனின் சினிமா பயணம் குறுகிய காலத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரபலங்கள் கூறிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது பிரதீப் ரங்கநாதன், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையடுத்து கீர்த்தீஸ்வர்ன் இயக்கும் ‘டியூட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நாயகி மமிதா பைஜூ நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் ‘டியூட்' படத்தில், தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்தி உலா வந்த நிலையில் இருவரும் பைக்கில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் ‘டியூட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.