

சென்னையில் நேற்று அட்சயா தங்க மாளிகை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்த நகைக் கடையை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைக்க வருகை தந்திருந்தார். இது தொடர்பான விளம்பர படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த நகை கடை திறப்பு விழா பற்றி ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்ததால், சிவகார்த்திகேயனை பார்ப்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர். ஏராளமான ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும் போது வருகை தந்த சிவகார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நகைக்கடையை திறந்து வைத்து விட்டு , ரசிகர்களிடம் பேசுவதற்காக சிவகார்த்திகேயன் மைக்கை வாங்கிய போது , ஆர்வம் மிகுதியான ரசிகர் ஒருவர் , சிவகார்த்திகேயனை பார்த்து "வருங்கால முதல்வர்!" என்று கோஷமிட தொடங்கினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் உஷ் என்று அந்த ரசிகரை வாயை மூட சொன்னார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் இன்று வேகமாக வைரலாகி கொண்டு வருகின்றது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'தி கோட் ' திரைப்படத்தில் ஒரு காட்சியில் , விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து "துப்பாக்கியை பிடிங்க சிவா" என்று கூறுவார். அதற்கு சிவகார்த்திகேயன் , " நீங்க இதைவிட முக்கியமான வேலையா போறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க அத பாருங்க, நான் இதை பார்க்கிறேன்! " என்று வசனம் பேசி இருப்பார்.
இந்த காட்சியை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பகிர்ந்து, விஜய் அரசியலுக்கு செல்வதால், அவரது தளபதி பட்டம் இனி சிவகார்த்திகேயனுக்கு தான் , அவரது இடமும் சிவகார்த்திகேயனுக்கு தான் என்று அப்போது பேசிக் கொண்டனர். அதன் பின்னர் துப்பாக்கி திரைப்படத்தை இயக்கிய ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மதராஸி திரைப்படத்தில் நடித்தார். தற்போது ரசிகர் ஒருவர் அவரை முதல்வர் என்று அழைத்ததால் , சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா? என்று பலரும் சமூக வலைதளங்களில் கல்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு சிலர் சிவா விஜயின் பாணியை பின்பற்றி அரசியலுக்கு வருகிறாரா? அல்லது தற்போது அரசியலுக்கு வர உள்ளதாக பேசப்படும் தனுஷை மனதில் வைத்து, இவ்வாறு கோஷமிட்டாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இடையில் பிணக்கு இருந்தது. இந்த இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையில் இன்றுவரை பனிப்போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அவரது கல்யாணத்தின் பொழுது அவரிடம் மோதிரம் வாங்க மட்டுமே பணம் இருந்ததாகவும் , அதனால் மோதிரம் மட்டுமே வாங்கி வெட்கத்துடன் தனது மனைவி ஆர்த்தியிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் சமீபத்தில் நகை கடைக்கு சென்ற சம்பவத்தைப் பற்றியும் பேசி உள்ளார். அவரது மனைவி நகைக்கடைக்கு சென்றால் , இரண்டு மணி நேரம் நகை கடை முழுக்க அலசி விட்டு முதலில் பார்த்த நகையையே தேர்ந்தெடுப்பார் அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் "விலை உயர்ந்த செல்போன்களையோ மற்றும் பொருட்களையோ வாங்குவதைவிட தங்கு ஆபரணங்கள் வாங்குவது சிறந்தது . அது ஆபரணமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கு தேவையான முதலீடாகவும் இருக்கும். ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பு அது தங்கத்தை வைத்து தான் மதிப்பிடப்படுகிறது. தங்கத்தின் முதலீடு செய்வது எதிர்காலத்தில் அதன் மதிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் இது தனி நபருக்கும் பாதுகாப்பையும் மதிப்பையும் கொடுக்கிறது " என்று கூறியுள்ளார்.