
தனது இயல்பான நடிப்பு திறமையால் இளம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கலைப்பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகவே மாறிவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மதராஸி படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க முருகதாஸ் சென்று விட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதே, சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் திரைப்படம் சிக்கந்தர் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 26-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யூத் ஜம்வால் நடித்துள்ளார்.
இவர்களுடன் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன் இந்த படம் வரும் செப்டம்பர் 5-ம்தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் துல்கர் சல்மானின் 'காந்தா' படமும் அதே தேதியில் (செப்டம்பர் 5-ம்தேதி)வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால், அவற்றிற்கு இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் மம்முட்டியின் மகனுமான நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இவர் தற்போது இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் காந்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹிர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜானு சாந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. காந்தா படத்தின் கதைக்களம் 1950களின் மெட்ராஸில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் துல்கரின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் இந்த முறையும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதால் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.