
அஜித்குமார் நடிப்பில் ‘வாலி' படத்தை இயக்கி திரையுலகில், இயக்குனராக கால் பதித்தார், எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கி தொடர் வெற்றியை பதிவு செய்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரிய அளவில் வெற்றியை கண்டது. எஸ். ஜே. சூர்யா இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்குவதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாகவும் களம் இறங்கினார். 2015-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இசை’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனைத்தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்து முழுநேர நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் வேடங்களில் அசத்தி வருகிறார்.
தமிழ் தாண்டி பிற மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் எப்போது படம் இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.
அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறப்போகிறது. ஆமாங்க, மீண்டும் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி அதில் அவர் கதாநாயகனாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்பையும் தற்போது அறிவித்துள்ளார். இது எஸ்.ஜே.சூர்யா 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் படம் ஆகும்.
அதாவது ‘கில்லர்' என்ற படத்தை அவரே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் படம் உருவாகிறது. இதர நடிகர்-நடிகைகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘கில்லர்’ திரைப்படம், எஸ்.ஜே.சூர்யாவின் முந்தைய திரைப்படமான ‘நியூ’ படத்தின் இரண்டாம் பாகம் போன்று இருக்கும் என்று சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இயக்குனராக களம் இறங்குவது குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, "முதல் படம் என்ற கனவுடன் மீண்டும் புதிய படத்தை இயக்கி, நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். போல சினிமாவில் நடிப்பில் ஆளுமை செலுத்துவதே என் கனவு. கில்லர் படம் என் கனவு படம். இது மக்களை குஷிப்படுத்தும். படத்தின் முக்கிய காட்சிகள் மெக்சிகோவில் படமாக்கப்பட இருக்கிறது" என்று கூறினார்.