வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தில் அதிரடி மாற்றம்! யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் ஏ.ஆர்.ரஹ்மான்?

Sk 26 Film combo
AR Rahman Venkat Prabhu &SK
Updated on

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'சேயோன்' என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை 'தாய் கிழவி' திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த தாய்க்கிழவி திரைப்படம் பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் , சேயோன் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகும் முன்னரே வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் கமிட் ஆகியிருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியாக இருந்த பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்னர் வெளியான மதராசி திரைப்படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் , அறிவியல் நகைச்சுவை சார்ந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

பராசக்தி திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த , தலைப்பிடப்படாத SK 26 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகளுக்காக படக்குழுவினருடன் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றிருந்தார். நவீன அறிவியல் சார்ந்த திரைக்கதை என்பதால் , இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் தொடர்பாக பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க பயணம் இருந்தது.

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் இந்த திரைப்படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு , சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். இடைப்பட்ட காலத்தில் இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த செய்தியை தயாரிப்பாளர் தியாகராஜன் மறுத்துள்ளார்.

தொடக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு கூறப்பட்ட கதையில், தற்போது ஏராளமான மாற்றங்கள் செய்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. படத்தின் கதையை மிகவும் சுவாரசியமாகவும் அத்துடன் ஜனரஞ்சகம் மிகுந்த கதையாக உருவாக்குமாறு, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. கதையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காகவே படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிகை இருப்பதால், இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடிக்கக்கூடும். இன்னும் படத்தில் வேறு எந்த நடிகரும் நடிகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

முதன்முறையாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாலும் , படத்திற்கு சர்வதேச அளவில் கவனத்தை பெறுவதற்காகவும் ஏ.ஆர். ரஹ்மானை பட தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படத்திற்கும் , அவரது பெரியப்பா மகனான யுவன் சங்கர் ராஜாவே இசையமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.இந்நிலையில் வெங்கட் பிரபு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்வது குறித்து விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. தனது சகோதரர் யுவனுடன் வெங்கட் பிரபுவிற்கு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டுள்ளதா? அல்லது தயாரிப்பாளர் தரப்பு விரும்புவதால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற உள்ளாரா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் , SK 26 திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com