ஒரே நடிகை மற்றும் நடிகரைக்கொண்டு பல கதாப்பாத்திரங்களாக ஒரே முழுநீல ஷாட்டில் படமாக்குவது என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய சவாலான ஒரு விஷயம். ஆனால், இயக்குநர் மோகன் ராஜா ஒரு பாடலுக்காக எடுத்துக்கொண்ட இந்த சவாலான முயற்சிதான், இன்று வரை இந்திய சினிமாவே பேசும் ஒரு தொழில்நுட்ப சாதனையாக உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடித்த 'தில்லாலங்கடி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சொல் பேச்சு' (Sol Pechu) பாடல் குறித்துதான் இயக்குநர் மோகன் ராஜா பேசியிருக்கிறார்.
இயக்குநர் மோகன் ராஜா அவர்கள் இந்தப் பாடலின் பின்னணி குறித்து ஒரு நேர்காணலில் பேசுகையில், இந்தக் காட்சி படப்பிடிப்பு குறித்து பேசினார்.
தெலுங்கில் ஒரு படத்தின் (இலியானா நடித்த) மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து, இரண்டு இலியானாக்கள் ஆடுவது போன்ற காட்சி இருக்கும். அதேபோல் தமிழில் மோகன் ராஜா ஒரு காட்சியை உருவாக்க விரும்பினார்.
இந்தக் காட்சியைப் பல அடுக்குகள் (Multi-Layer) கொண்டதாகப் படமாக்க வேண்டும் என்பதே இயக்குநரின் ஆரம்பத் திட்டமாக இருந்தது.
ஆனால், இந்தப் பாடலின் ஒளிப்பதிவை மேற்கொள்ள வந்த ஷோபி மாஸ்டர், "சார்! ஏன் இதைப் பல ஷாட்டுகளாக எடுக்க வேண்டும்? முழுப் பாடலையும் ஒரே ஷாட்டில் எடுத்துவிடலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.
இயக்குநர் ஆச்சர்யத்துடன், "எப்படி மாஸ்டர், ஒரு பாடலை ஒரே ஷாட்டில் எடுக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷோபி மாஸ்டர், "நான் முயற்சி செய்கிறேன் சார்" என்று உறுதி கொடுத்துள்ளார்.
இந்தச் சவாலை நிறைவேற்ற, படக்குழுவினர் மிகப்பெரிய தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதற்காகச் சிங்கப்பூரிலிருந்து ‘நீரோ' (Nero) கேமரா என்றழைக்கப்படும் அதிநவீன, முழுவதுமாக மோட்டார் பொருத்தப்பட்ட கேமரா வரவழைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 4.5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் கேமரா நகர்வு, முழுவதுமாகப் பிரோக்ராம் செய்யப்பட்டது. கேமராவை ஆன் செய்தால், அது ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே நகர்வில் செல்லும்.
இந்தப் பாடல் காட்சிக்காக, படக்குழுவினர் தொடர்ந்து 48 மணி நேரம் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்காக மட்டுமல்ல, கேமராவின் ஒவ்வொரு நகர்வுக்கும் சரியாக ஃபோகஸ் மற்றும் மார்க்கிங் செய்வதற்காகவே செய்யப்பட்டது.
ஒரே ஷாட்டில் பல லேயர்களை உருவாக்குவதுதான் இந்தக் காட்சியின் உச்சகட்ட சவால். ஒரு லேயர் முடிந்ததும், கேமராவை மீண்டும் முதலிலிருந்து இயக்கி, அடுத்த லேயருக்கான நடிப்பைப் படமாக்க வேண்டும்.
கிரீன் மேட்களை (Green Mat) அங்கங்கே ஷிப்ட் செய்து, ஒவ்வொரு லேயராகப் படமாக்கினர்.
ஐந்து கதாபாத்திரங்கள் ஒரே நேரத்தில், வெவ்வேறு நகர்வுகளில் ஆடுவது போல் வடிவமைக்கப்பட்டது. இந்த ஐந்து நகர்வுகளும் ஒரே மியூசிக்குக்கு, ஒரே ஷாட்டில், வெவ்வேறு பொசிஷன்களில் சரியாக வந்து 'லேண்ட்' ஆக வேண்டும்!
நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பாலேயே இது சாத்தியமானது. பின்னர், ஸ்கேட் ஷூ அணிந்து வீரர்கள் குறுக்கே வருவது போன்ற சில விசித்திரமான கிராஃபிக்ஸ் வேலைகளையும் செய்து படக்குழுவினர் செய்து அசத்தினர் என்று மோகன் ராஜா கூறினார்.
இயக்குநர் மோகன் ராஜா இந்தச் சாதனையைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இந்தியாவில் இதுவரை யாரும் ஒரு முழுப் பாடலையும் ஒரே ஷாட்டில் படமாக்கியதில்லை. இந்தியாவிலேயே ஒன் அன்ட் ஒன்லி (One and Only) ஃபுல் ஷாட் பாடல் இதுதான்" என்று தெரிவித்தார்.
இந்தப் பாடலின் வெற்றி, தொழில்நுட்பத்தில் ஷோபி மாஸ்டர் மற்றும் நடிகர்களின் முழு அர்ப்பணிப்பு இல்லாமல் சாத்தியமாகி இருக்காது என்பதையும் இயக்குநர் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.