விமர்சனம்: சூது கவ்வும் 2 - ரீ மேக்கா? இரண்டாம் பாகமா? - குழப்பமே (ஏமாற்றமுமே) கவ்வுகிறது!
ரேட்டிங்(2 / 5)
கடந்த 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி ஸிம்ஹா நடித்த சூது கவ்வும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிறந்த டார்க் காமெடி படத்திற்கு உதாரணமாக இப்போது வரை இப்படம் பேசப்பட்டு வருகிறது.
பதினோரு வருடங்கள் கழித்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை SJ அர்ஜுன் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, ராதா ரவி, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த ஹீரோ கேரக்டரை இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா செய்துள்ளார். முதல் பாகத்தில் வந்த கருணாகரன் இரண்டாம் பாக்கதில் அமைச்சராக இருக்கிறார். இவரை மிர்சி சிவாவும், அவரது நண்பர்களும் கடத்தி விடுகிறார்கள். மற்றொரு பக்கம் இரண்டு சைக்கோ போலீஸ்காரர்கள் மிர்சி சிவா டீமை காலி செய்ய நினைக்கிறார்கள். கருணாகரன் காணாமல் போனதால் அரசியல் களத்தில் பூகம்பம் வெடிக்கிறது. இந்த குழப்பம் எப்படி தீர்ந்தது என்று சொல்வதுதான் இந்த சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகம் என்றால் பழைய படத்தின் கதையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் சூது கவ்வும் படத்தின் முதல் பாக காட்சிகளை அப்படியே வைத்திருக்கிறார்கள். இது ரீ மேக் படமா என்று கேட்டால் அதுவும் இல்லை என்பது போல் திரைக்கதை குழப்பமாகவே இருக்கிறது.
படத்தை பார்க்கும் போது இந்த கதை எப்படி போனால் நமக்கென்ன என்ற அயர்ச்சியே வருகிறது. ஒன்றோடோன்று தொடர்பில்லாத காட்சிகள், மிக சுமாரான ஒளிப்பதிவு என்று செல்கிறது படம்.
சூது கவ்வும் முதல் பாகத்தில் டார்க் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இந்த இரண்டாம் பாகத்தில் டார்க், லைட் என எந்த காமெடியும் ஒர்க் அவுட் ஆகவில்லை, ஒர்க் அவுட் ஆக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஸ்கிரிப்ட், நடிப்பு என்று எங்கேயும் நகைசுவையை கொண்டு வர முயற்சி செய்யவில்லை. 'அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்சி சிவா' மேடையில் பேசி காமெடி செய்வது போலவே படத்திலும் செய்திருக்கிறார் (அதுவே போதும் என்று நினைத்து விட்டார் போலும்... சினிமாவுக்கு இன்னும் வேணும் சார்).
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கற்பனையில் ஒரு பெண் வருவார். இந்த இரண்டாம் பாகத்திலும் சிவா கற்பனையில் ஒரு பெண் வருகிறார். இந்த பெண் வரும் காட்சிகளில் "நீ ஏம்மா நடுவுல வந்து தொந்தரவு பண்ற" என ரசிகர்கள் சொல்வதை கேட்க முடிந்தது.
பலர் இந்த படத்தில் நடித்திருந்தாலும், கருணாகரனின் நடிப்பு மட்டும் ஓகே என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. சூது கவ்வும் 2 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாக்கத்தை மனதில் வைத்து தியேட்டர்க்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சூது கவ்வும் 2 - குழப்பமும் ஏமாற்றமுமே கவ்வுகிறது.