சுகுமார் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘புஷ்பா 2’ படம் கடந்த 5-ந்தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திலும் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா ஜோடி நடித்திருந்தது. இந்த படமும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வெளியான 10 நாளில் ரூ.1000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டால் ரசிகர்கள் தங்கள் ஆரவாரத்தை வெறித்தனமாக காட்டுவார்கள். இதில் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் சற்று அதிகமாக கொண்டாடுவார்கள்.
கடந்த 4-ந்தேதி இந்த படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்க்க, நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு முன் அறிவிப்பு இல்லாமல் சென்ற போது மெகாஸ்டாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்ததார், அவரது மகன் நெரிசலில் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
இந்நிலையில் வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயரும் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மற்றும் ஆந்திர ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தியேட்டரில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் இருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இங்கே நாம் அனைவரும் தவறு செய்கிறோம். இதற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல” என்று குறிபிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில், "நம்பமுடியாதது" மற்றும் "இதயத்தை உடைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "நான் இப்போது பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானதும், மிகுந்த வருத்தமளிப்பதாகும். இருப்பினும், எல்லாவற்றுக்கும் ஒரு தனி நபர் குற்றம் சாட்டப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலைமை நம்பமுடியாதது மற்றும் இதயத்தை உடைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் வருண் தவான், “ஒருவர் மீது மட்டும் குற்றத்தை சுமத்த முடியாது” என்றார். மேலும் “பாதுகாப்பு நெறிமுறைகள் ஒரு நடிகரின் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது. இந்த சம்பவம் சோகமானது. எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது,” என்று கூறியுள்ளார்.
சந்தீப் கிஷ்ன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிகழ்வுக்கு ஒரு மனிதன் எப்படி பொறுப்பாக முடியும்? இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் & அது மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் "லவ் யூ அல்லு அர்ஜுன் அண்ணா" என்றும் குறிப்பிட்டுள்ளார்.