
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சூரி, ஆரம்பத்தில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து தனது அயராத உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று கதாநாயகனாகவும் முக்கிய பிரபலமாகவும் மாறி இருக்கிறார். இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
அதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா என்று பலருடைய படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வந்த இவருடைய காமெடி வாழ்க்கையை வெற்றிமாறன் அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூரியின் வித்தியாசமான நடிப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
அதற்குப் பிறகு விடுதலை 2, கருடன், மாமன் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், இவர்களுடன் சேர்ந்து ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் கதையை சூரி எழுதியிருக்கிறார். தாய் மாமன் உறவு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், அக்கா - தம்பி பாசம், கணவன் - மனைவி எப்படி அன்னோன்யமாக கடைசி காலம் வரை இருக்க வேண்டும் என்பதையும் கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த படம் 16-ம்தேதி வெளியான நிலையில் இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் அதாவது தாய் மாமனின் பொறுப்புகளை சொல்லும் இந்த படம் குடும்ப ரசிகர்களிடம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ.2.9 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள மாமன் வரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியானதற்கு முதல்நாள், படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மதுரையைச் சேர்ந்த சூரியின் ரசிகர்கள் சிலர், மண்சோறு சாப்பிட்டனர். ரசிகர்களின் இந்த செயல்பற்றி, சூரியிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட்டது. அதற்கு சூரி, ‘அவர்களை என் தம்பிகள் என்று சொல்வதற்கே வருத்தமாக இருக்கிறது. இது என்ன முட்டாள்தனம். நல்ல கதையைக் கொண்ட ஒரு படைப்பு எப்படியும் வெற்றிபெறும். அதை விட்டு விட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? என்று கேள்வி எழுப்பிய சூரி, இப்படிப்பட்டவர்கள் எனக்கு தம்பியாக, ரசிகர்களாக இருக்க தகுதியில்லை’ என்று கூறியிருந்தார்.
மேலும், அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும் சூரி தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், ‘திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள், தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர்களை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால், கலையும் கலாசாரமும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்து நிற்கும் சூரியை ‘பலே பாண்டியா' என்று பாராட்டுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.