விமர்சனம்: சொர்க்கவாசல் - சிறை சூழ்நிலை விவரிப்பு சிறப்பு!
ரேட்டிங்(3 / 5)
"வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன், காந்தி இல்லைங்க. உள்ளே போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க." என்று மனிதன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். சிறையில் உள்ள கைதிகளை மையப்படுத்தி எழுதபட்ட வரிகள் இவை. விசாரணை கைதியாகவும், செய்யாத குற்றத்திற்காகவும் பல ஆண்டுகளாக இந்திய சிறைசாலையில் இருக்கும் அப்பாவிகள் பலர். இது போன்று செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் அப்பாவியை சிறை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்று சொல்லும் படம் சொர்க்க வாசல்.
1990 களில் சென்னை மத்திய சிறையில் கைதிகள் - சிறை காவலர்கள் உடன் நடந்த மோதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ட்ரீம்வாரியர் தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். (இப்படத்தின் கதை தான் எழுதிய கிளை சிறை என்ற கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டை முன் வைத்துள்ளார் குறும்பட இயக்குனர் கிருஷ்ணகுமார்)
தன் வீட்டருகே தள்ளு வண்டியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார் RJ பாலாஜி. அப்பகுதியில் நடக்கும் ஒரு கொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து பெயில் கிடைக்கும் சூழ்நிலை உருவாகிறது. பெயில் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரி ஒருவர், பாலாஜியை அழைத்து, பிரபல தாதா சிகா (செல்வ ராகவன்) உணவில் பேதி மருந்து கலக்க சொல்கிறார். இந்த மருந்தை உணவில் கலப்பதற்கு முன்பே தாதா எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இந்த விஷயம் சிறை கைதிகள் - காவலர்கள் மோதலாக வெடிக்கிறது. இந்த மோதலால் பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயில் கிடைக்காமல் போகிறது. கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் பாலாஜிதான் தாதா மறைவுக்கு காரணம் என்றெண்ணி பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்த கலவரத்திலிருந்து ஹீரோ பாலாஜி தப்பித்தாரா? பெயில் கிடைத்ததா? என்று சொல்வதுதான் சொர்க்கவாசல்.
நகைச்சுவை துணுக்கு தோரணங்களை தந்து கொண்டிருந்த ஆர்.ஜெ.பாலாஜி இது போல் வெயிட்டான கதையை தாங்குவாரா என்ற கேள்வி நமக்குள் எழும் போது, நீங்கள் நினைப்பது தவறு என்று அடுத்தடுத்த காட்சிகளில் உணர்த்தி விடுகிறார். தன் காதலியையும், அம்மாவையும், பிரிந்து வர மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போதும், எப்படியாவது இந்த சிறை நரகத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று ஒரு சராசரி இளைஞனாக நடிக்கும் போதும் பாலாஜி நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய் விட்டார் என்று சொல்ல வேண்டும். தன்னை நம்பிதான் கதை நகர்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். (நடிப்பில் ஆங்காங்கே தனுஷ் சாயல் தெரிகிறது?)
பாலாஜி சக்தி வேல், செல்வராகவன், சானியா அய்யப்பன் அந்தோணி தாசன், ஹக்கீஷா, ஷர்புதின் என நடித்த அனைவருமே அளவெடுத்து தைத்தது போல சரியாக கேரக்டர்களுக்கு பொருந்துகிறார்கள். இதுவரை கருணாஸ் நடித்த படங்களிலேயே இப்படம் ஒரு மாறுபட்ட கருணாஸை காட்டியுள்ளது. "நுனி நாக்குல இங்கிலிஷ் பேசுற ஆபீஸர்களைதான் இவங்களுக்கு பிடிக்குது எங்களை மாதிரி ஆட்கள் சொல்றதை ஆபீஸர்ஸ் கேட்க மாட்டாங்க" என்று கருணாஸ் சொல்லும் இடம் யோசிக்க வைக்கிறது.
படத்தின் முதல் பாதியில் வரும் திரில்லர் அனுபவத்தை இரண்டாம் பாதியிலும் குறையாமல் பார்த்து கொண்ட விதத்தில் டைரக்டருக்கு சபாஷ் போடலாம். சிறைச்சாலையை உருவாக்கிய விதம் மிக சிறப்பு. கிறிஸ்டோ சேவியரின் இசை சுமார் ரகம் தான். சில லாஜிக் மீறல்களும், அதீத வன்முறை காட்சிகளும் படத்தின் குறைகளாக இருக்கின்றன. சிறைக்கு பின்னால் இருக்கும் நிழல் உலகத்தை ஓரளவு இப்படம் பதிவு செய்துள்ளது. இந்த படம் பார்க்க செல்லும் முன் மற்ற RJ பாலாஜி படங்களை போல் குடும்பத்துடன் பார்க்கும் படமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளும் இதய பலவீனம் உள்ளவர்களும் இப்படத்தை காண்பதை தவிர்க்க வேண்டும்.