பயோபிக்காக மாறும் 'தாதா'வின் கதை..! காதலும் போராட்டமும் நிறைந்த ‘பெங்கால் டைகர்’ வாழ்க்கை..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.
Ganguly biopic film
Savurav Ganguli Rajkumar Rao Dhanya manikthalaimage credit :X
Updated on

'பெங்கால் டைகர்' அல்லது 'பெங்கால் தாதா' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படம், பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 90களில் கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி நாயகனாகவும், ஆக்ரோஷமான கேப்டனாகவும் பார்க்கப் பட்டவர் சவுரவ் கங்குலி. இன்று இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் அணியாக இருப்பதற்கு முக்கிய காரணம் சவுரவ் கங்குலி என்றால் மிகையல்ல.

பெரும்பாலும் தோல்விகளை கண்டிருந்த இந்திய அணியை வெற்றிகரமான அணியாக மாற்றி , உலகக் கோப்பை இறுதி வரைக்கும் கொண்டு சென்றவர் கங்குலி. அவர் போட்ட விதையில் தான் மகேந்திர சிங் தோனி , ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.

இத்தகைய சிறப்பு மிக்க சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ரன்பீர் கபூர் , கார்த்திக் ஆர்யன் உள்ளிட்ட பல நடிகர்களை தேர்வு செய்ய நினைத்துள்ளனர். ஆனாலும் , கதாபாத்திரத்தின் தன்மைக்கு ராஜ்குமார் ராவ் சரியான தேர்வாக இருப்பார் என்று இறுதியில் அவரை தேர்வு செய்துள்ளனர்.

கங்குலியின் மனைவி டோனா கதாபாத்திரத்தில் நடிக்க தன்யா மணிக்தலா என்கிற வங்க மொழி நடிகை நடிக்கிறார். இந்த படத்தில் சிறிய வயது டோனாவாக ஸ்ரீஜா பட்டாச்சார்யா நடிக்கிறார். கங்குலிக்கு டோனா மீதான காதல் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. அதே தெருவில் வசிக்கும் டோனாவை கவர்வதற்காக தான் கங்குலி முதலில் பேட்டை தூக்கினார். இவர்களின் காதல் வளர்வதற்கு கிரிக்கெட் பெரிதும் உதவியது. அதனால், இந்த திரைப்படத்தில் இருவரின் காதல் காட்சிகளும் அதிகம் இருக்கும் என நம்பலாம்.

கங்குலி பாரம்பரியமிக்க வங்காள குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், படத்தில் வங்காள கலாச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பல நடிகர்கள் வங்க மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு தாதா: தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகளை மும்பையில் முடித்துவிட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் கொல்கத்தா மாநகரத்திற்கு வந்துள்ளனர்

இந்த திரைப்படத்தில் நடிக்கும் ராஜ்குமார் ராவ் அர்ப்பணிப்பு உணர்வுடன் காலையிலேயே ஈடன் கார்டன் மைதானத்தில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சுமார் 15 நாட்கள் வரை கொல்கத்தாவில் உள்ள பல பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு கங்குலியின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முதலாவதாக சௌரவ் கங்குலி வீடு இருக்கும் பெஹாலாவின் சந்துகளில் பயணம் தொடங்குகிறது. இங்குதான் கங்குலியின் குழந்தை பருவம் மற்றும் அவர் கிரிக்கெட் வீரராக உருவாகும் பயணமும் தொடங்குகிறது. அதன் பின்னர் வரலாற்று சிறப்புமிக்க ஈஸ்ட் பெங்கால் கிளப் மைதானத்தில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இங்கு தான் கங்குலி முதலில் ஆர்யன் கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். துக்காராம் கிரிக்கெட் பயிற்சி மையம் , ஈடன் கார்டன் எல்லாம் தாதாவின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாக இருப்பதால், இந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தாதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்கு பாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பிரித்தம் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். இந்த படம் காதல் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை முக்கிய அம்சமாகக் கொண்டிருப்பதால் பிரித்தம் அதை தன் இசையால் மெருகூட்டுவார். இந்த படத்தை விக்ரமாதித்ய மோட்வானே இயக்குகிறார்.

logo
Kalki Online
kalkionline.com