

டோபி மேகுவேரே என்றால் சட்டென்று நினைவுக்கு வராது. ஆனால் , ஸ்பைடர்மேன் ஹீரோவாக நடித்தவர் என்றால் உலகில் அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு அந்த திரைப்படம் உலகின் எல்லை வரை அவரைக் கொண்டு சென்றுள்ளது. ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அவர் நிஜத்திலும் கதாநாயகன் போன்றே செயல்பட்டுள்ளார். சமீபத்தில் மொத ராத்திரி என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
அந்த திரைப்படத்தின் கதைப்படி , கதாநாயகி திருமணமான அன்றே, தனது காதலனுடன் சென்று திருமணம் செய்து கொள்ள நினைப்பார். அந்த விஷயம் அறிந்த கதாநாயகியின் கணவன், அவளை அவளது காலதலனுடன் சேர்த்து வைக்க உதவி செய்வார். இதே போன்ற ஒரு கதை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு டோபி மேகுவேரும் ஜெனிஃபர் மேயரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில ஆண்டுகள் மகிழ்ச்சிகரமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் ரூபி ஓட்டிஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடுகள் காரணமாக 2016 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர்.
இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டாலும், தங்களின் குழந்தைகளின் மனநலனுக்காகவும் , அவர்களின் வளர்ச்சிக்காகவும் நண்பர்களாக தொடர்ந்தனர். குழந்தைகளின் முக்கிய நிகழ்வுகளில் பரஸ்பரம் இருவரும் கலந்து கொண்டனர். பிரிந்து வாழ்ந்தாலும் பெற்றோருக்கான கடமைகளை சரிவர நிறைவேற்றி வந்தனர். அமெரிக்க ஊடகங்கள் இவர்கள் இருவரையும் சிறந்த பெற்றோர்கள் என்று பலமுறை பாராட்டி எழுதி உள்ளன.
ஜெனிஃபர் மேயரும், நைஜீரிய வம்சாவளி தொழிலதிபர் ஜெஃப்ரி ஒகன்லேசியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலின் அடையாளமாக கடந்த மே மாதம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களது திருமணம் சிறப்பான முறையில் ஹவாய் தீவுகளில் உள்ள ரிசாட்டில் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தை சிறப்பான முறையில் நடத்தி வைத்தது ஜெனிபரின் முன்னாள் கணவரான டோபி மேகுவேரே என்பதுதான் பலரையும் அதிர செய்து உள்ளது.
டோபி மேகுவேரே தானே முன்வந்து திருமணத்திற்குரிய ஒரு சில கிறிஸ்தவ மத சடங்குகளை அவர்களுக்கு செய்து வைத்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த திருமண விழாவிற்கு , தனது நெருங்கிய நண்பர்களான ஹாலிவுட் சேர்ந்த பல நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
டோபி மேகுவேரேவின் அழைப்பினை ஏற்று புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ , நடிகைகள் கேட் ஹட்சன் , கோர்ட்னி காக்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஸ்பைடர் மேன் கதாநாயகனின் இந்த செயல், அவரது நல்ல மனதினை வெளி உலகத்திற்கு காட்டியுள்ளது. தனது முன்னாள் மனைவியின் ஆசைகளையும் மதித்து அவருக்கு உறுதுணையாக நின்று திருமணத்தையும் நடத்தி வைத்த அவரது செயல் உலகம் முழுக்க பேசுபொருளாகியுள்ளது. ஜெனிபர் , டோபியை தனது மிகச் சிறந்த நண்பர் என்று பலமுறை ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவரது நல்ல குணங்களையும் பாராட்டி உள்ளார்.