ராஜஸ்தானில் உள்ள தங்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், சோனி SAB (சன் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல்) இன் 'ஸ்ரீமத் ராமாயண்' தொடரில் புஷ்கல் கதாபாத்திரத்தில் நடித்த எட்டு வயது தொலைக்காட்சி நடிகர் வீர் சர்மா மற்றும் அவரது 16 வயது சகோதரர் ஷோரியா சர்மா ஆகியோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது சகோதரர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் தந்தை ஜிதேந்திர சர்மா, ஒரு பயிற்சி மைய ஆசிரியர், ஒரு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார், மேலும் அவர்களின் தாயார், நடிகை ரீட்டா சர்மா, அப்போது மும்பையில் இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சம்பவ இடத்தை ஆய்வு செய்த கோட்டா காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தேஜஸ்வனி கௌதம், மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது எனக் கூறினார்.
வரவேற்பறையில் (Drawing room) தீ விபத்து ஏற்பட்டதாகவும், மற்ற அறைகளுக்குத் தீ பரவாததால், உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் பெரும்பாலும் புகையை சுவாசித்ததாலேயே உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அனந்தபுரா காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட தீப்ஸ்ரீ கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக வட்ட ஆய்வாளர் பூபேந்திர சிங் தெரிவித்தார். குடியிருப்பிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகள் மயங்கிக் கிடந்ததைக் கண்டனர். அவர்கள் உடனடியாக தந்தைக்குத் தகவல் தெரிவித்ததுடன், சிறுவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
அக்கம் பக்கத்தினர், கட்டிடத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்துவிட்டதாகவும், எனவே தீயணைப்பு வாகனங்கள் எதுவும் அழைக்கப்படவில்லை என்றும் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்தார். வரவேற்பறை முற்றிலும் எரிந்து, அங்கிருந்த தளவாடங்கள் சாம்பலாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாய் மும்பையிலிருந்து வந்த பிறகு, குழந்தைகளின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தினரின் விருப்பப்படி, குழந்தைகளின் கண்கள் ஒரு கண் வங்கிக்கு தானம் செய்யப்பட்டன.
தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் மரணங்கள் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், BNSS சட்டத்தின் பிரிவு 194ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.