விமர்சனம்: சுமோ - ரொம்ப சுமார்!
ரேட்டிங்(2 / 5)
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் வந்துள்ள படம் சுமோ. மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், VTV கணேஷ் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா கடற்கரை பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு மிக குண்டான ஒரு வெளிநாட்டு நபர் மயக்கமான நிலையில் கடற்கரையில் விழுந்து கிடக்கிறார். சிவா அந்த நபரை எழுப்பி உணவு அளிக்கிறார். அந்த நபரும் அன்பாக இருக்கிறார். ஆனால் அந்த நபரால் எதுவும் பேச இயலவில்லை. அந்த குண்டு நபர் யார் என்று விசாரணை செய்து பார்க்கும் போது அந்த குண்டு நபர் ஜப்பானை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் என்று தெரிய வருகிறது. சிவாவும், VTV கணேசனும் சேர்ந்து அந்த நபரை ஜப்பானுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அந்த குண்டு நபர் யார், அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரிய வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னால் சின்னவர் என்ற படத்தில் செந்திலை கடற்கரை ஓரத்தில் கண்டெடுப்பார் கவுண்டமணி. செந்தில் ஏதோ ஒரு வெளிநாட்டு நபர் போல பேசி பலரின் பரிதாபத்தை பெற்று விடுவார். ஒரு கட்டத்தில் செந்தில் லோக்கல் ஆள் தான் என்று தெரிய வர கவுண்டமணியிடம் செம அடி வாங்குவார். இந்த நகைச்சுவையின் ஒன் லைன் தான் சுமோ படத்தின் கதையும். நகைச்சுவைக்கு அதிக ஸ்கோப் இருக்கும் கதையில் நகைச்சுவைக்காக டைரக்டரோ அல்லது நடித்த நடிகர்களோ எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த கதையை எதற்கு பிளாஷ் பேக் பின்னணியில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. எப்படி சொல்லி இருந்தாலும் எந்த சுவாரசியமும் படத்தில் இருந்திருக்காது.
"சிவா சார் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று டைட்டிலில் போட்டால் மட்டும் போதுமா? சூப்பர் ஸ்டார் பெயருக்காகவாவது கொஞ்சம் நியாயம் சேர்க்க வேண்டாமா?" மிர்ச்சி சிவா மற்ற படங்களில் காமெடி செய்ய ஏதோ முயற்சி செய்வார். இந்த படத்தில் அதுவும் இல்லை. VTV கணேஷ் காமெடி செய்வதற்கு தனது குரலே நகைச்சுவைக்கு போதும் என்று நினைத்து விட்டார் போலும். குரலை தாண்டி ஏதாவது முயற்சி செய்யுங்கள் சார். யோகி பாபு இருக்கிறார். பட் நோ காமெடி. பிரியா ஆனந்த் வந்து போகிறார். பின்னணி இசை பல காட்சிகளில் இணையவே இல்லை. நகைச்சுவையாகவும் இல்லாமல், சீரியஸாகவும் இல்லாமல் ரொம்ப சுமாரான படமாக வந்துள்ளது சுமோ. படத்தை பார்ப்பது உங்கள் சாய்ஸ்.