விமர்சனம்: வல்லமை - ஒன் லைன் மட்டும் போதுமா?
ரேட்டிங்(2 / 5)
இன்று இந்தியாவில் பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இதை தடுக்க போக்சோ சட்டம் அமலுக்கு வந்த பின்பும் இந்த குற்றங்கள் முற்றிலுமாக நிற்கவில்லை. இந்த ஒன் லைனை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்து விட்டன; வந்து கொண்டிருக்கின்றன; வரவும் போகின்றன!
இதே பின்னணியை கொண்டு வல்லமை என்ற படம் இந்த வாரம் வந்துள்ளது. கருப்பையா முருகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். பிரேம்ஜி கங்கை அமரன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
மனைவியை இழந்த சரவணன் ( பிரேம்ஜி ) தனது 11 வயது மகளுடன் சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறார். தனது மகளை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கிறார். ஒரு நாள் தனது மகள் பூப்பெய்தியதாக நினைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்து செல்கிறார். மகளை பரிசோதிக்கும் மருத்துவர் உங்கள் பெண் பூப்பெய்தவில்லை.
யாரோ ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று சொல்கிறார். இந்த தவறை செய்தது யார்? என பாதிக்கப்பட்ட மகளுக்கும் சொல்ல தெரியவில்லை. சில நாட்கள் கழித்து இந்த தவறை செய்தது பள்ளிக்கு வந்த சிறப்பு விருந்தினர் என்று கண்டு பிடிக்கிறார். அப்பாவும், மகளும் சேர்ந்து தவறு செய்தவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். திட்டம் வெற்றி அடைந்ததா? என்பது தான் கதை.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் என்ற கருவை வைத்துக்கொண்டு ஒரு திரில்லர் படம் தந்திருக்கலாம். அல்லது இந்த குற்றங்களை பற்றியும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வையும் படத்தில் சொல்லி இருக்கலாம். இதை போன்ற எந்த விஷயத்தையும் சொல்லாமல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றி எந்த வித புரிதலும் இல்லாமல் படத்தை தந்திருக்கிறார் டைரக்டர்.
படத்தில் வரும் போலீஸ்காரர்கள், ஆசிரியர், பள்ளி பியூன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் ஒரு செயற்கைத் தன்மை தெரிகிறது. படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் அப்பாவாக நடிக்கும் பிரேம்ஜி மற்றும் மகளாக நடிக்கும் திவ்யதர்ஷினியின் நடிப்பும் தான். பெரும்பாலான படங்களிலும் லைட், காமெடி கதாபாத்திரங்களில் நடித்தே பார்த்துவிட்ட இவரை, ஒரு நடுத்தர வயது அப்பாவாக பார்ப்பது வித்யாசமாகவும் ஓரளவு நன்றாகவும் இருக்கிறது. ஆனால், தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று அவர் தவிக்கும் காட்சியை பார்க்கும் போது, பிரேம்ஜியை டைரக்டர்கள் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவரது சகோதரர் வெங்கட் பிரபுவாவது இவரின் நடிப்புக்கு தீனி போட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கொலை செய்வது மட்டுமே தீர்வு என்று சொல்வது அபத்தத்தின் உச்சம். சட்ட ரீதியான கடுமையான தண்டனைகள் மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.
இந்த ஒன் லைனில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான 'கார்கி', இப்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள 'கோர்ட்' போன்ற படங்கள் இந்த பிரச்சனையை சரியான திசையில் ஆராய்ந்து உள்ளன. இந்த வரிசையில் வல்லமை வந்திருந்தால் வலிமையான படம் என்று சொல்லி இருக்கலாம்.
வல்லமை - ஒன் லைன் மட்டும் தான் ஒகே. சொன்ன விதம் பலவீனம்.