
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் திரைக்கு வந்தால், ஒவ்வொரு தியேட்டரும் திருவிழா போல் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு ரஜினி ரசிகர்கள் தலைவர் படத்தை கொண்டாடி தீர்ப்பார்கள். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ரஜினி கூட, அவர் வளர்ந்து வரும் காலத்தில் இரண்டு நடிகர்களைப் பார்த்து பயந்தார் என சமீபத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ஏன் பயந்தார்? அப்படி அந்த நடிகர்கள் என்ன செய்தார்கள்? வாங்க தெரிந்து கொள்வோம்.
பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்த சிவாஜி ராவ் கெயிக்வாட் தான், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உருவெடுத்தார். இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். இவர் தான் ரஜினியை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர். ரஜினியின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ரஜினி, பிறகு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினி.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு படங்களும் வெற்றியடைந்தது. வயதானாலும் இவரது மார்க்கெட் மட்டும் குறையவில்லை என்பதற்கு இப்படங்களின் வெற்றியே சான்றாகும். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த போது நடிகர் ராமராஜன் மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரையும் கண்டு பயந்தார் என சமீபத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு காலத்தில் ராமராஜன் மிகப்பெரிய நடிகராக இருந்தார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி, வசூலை வாரிக் குவித்தன. குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. இவரைப் பார்த்து ரஜினி சாரே பயந்து விட்டார். என்னப்பா ராமராஜன் திரைப்படம் வசூலை வாரிக் குவிக்கிறதே என்று ரஜினி என்னிடம் ஒருமுறை தெரிவித்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருசில நடிகர்களைப் பார்த்து ரஜினி பயந்துள்ளார். அதில் முக்கியமானவர்கள் என்றால் ராமராஜனும், ராஜ்கிரணும் தான். இதனை ரஜினியே ஒருமுறை என்னிடம் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். ராஜ்கிரண் திரைப்படங்கள் மண் மனம் மாறாத கிராமத்து சாயலில் இருந்ததால், அன்றைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. லுங்கியை மடித்துக் கொண்டு நடித்த ராஜ்கிரணை அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டது சாதாரண ஒன்றல்ல” என கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
அன்றைய காலத்து கதாநாயகரான ராமராஜன் நடிப்பில் இந்த ஆண்டில் சாமானியன் என்ற திரைப்படம் வெளியானது. சிறு பட்ஜெட் என்பதால் என்னவோ இப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராஜ்கிரண் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரிடம் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால், அன்று லுங்கியில் நடித்தார். இன்று வேட்டியில் நடிக்கிறார்.