ஷாருக்கானைப் பின்பற்றும் சூர்யா! இதுதான் காரணமா?

Surya
Actor surya
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனித்துவமான கதைத் தேர்வு மற்றும் அற்புதமான நடிப்பு என இவரது சினிமா பயணம் வெற்றிகரமாக செல்கிறது. சில படங்கள் தோல்வியைச் சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு தனது பயணத்தைத் தெடர்ந்து விடுவார். ஒவ்வொரு படத்திற்கும் 100% உழைப்பைக் கொடுக்கும் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொன்ன வரிகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். பாலிவுட் பாட்ஷா சொன்னது என்ன? அதனை சூர்யா பின்பற்றுவது ஏன் என இப்போது பார்ப்போம்.

1997 ஆம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார் சூர்யா. இதைத் தொடர்ந்து நந்தா, பிரண்ட்ஸ், பிதாமகன், உன்னை நினைத்து, ஸ்ரீ மற்றும் மெளனம் பேசியதே என பட வாய்ப்புகள் குவிந்தன. சில படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. தனது சிறப்பான நடிப்பால் தமிழக அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் எடிசன் விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன் மற்றும் ஜெய்பீம் போன்ற படங்கள் சூர்யாவின் சினிமா பயணத்தில் முக்கியத் திரைப்படங்களாகும். தற்போது ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்கிறார் சூர்யா. நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சூர்யா, அகரம் என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுகிறார்.

பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஷாருக்கான் சொன்ன இரண்டு வரிகளை சூர்யா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம். அந்த வரிகள் தான் தோல்வியில் இருந்து மீளவும், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பவும் தனக்கு உதவின என சமீபத்தில் சூர்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பாலிவுட் நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஷாருக்கான். இந்திய சினிமாவில் அவரது வளர்ச்சி அபரிமிதமானது. அவர் சொல்லிய ஒரு வாக்கியத்தை நான் இன்றளவும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். நாய் மாதிரி உழைக்க வேண்டும்; ராஜா மாதிரி வாழ வேண்டும் என்று ஷாருக்கான் சொல்லியிருக்கிறார். இதை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். என்னுடைய கடினமான காலங்களில் இந்த வரிகள் தான் ஆறுதலாய் இருந்தன. தோல்வியில் இருந்து மீண்டு வரவும் உதவின. நம்முடைய உழைப்பு என்றுமே நம்மைக் கைவிடாது...” என சூர்யா கூறினார்.

பாலிவுட்டில் தனது படங்களின் மூலம் வசூல் வேட்டை நடத்துபவர் நடிகர் ஷாருக்கான். இவர் கடந்த ஒருசில ஆண்டுகளில் மட்டும் பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்களின் மூலம் இரண்டு முறை ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தார். கோலிவுட் இயக்குநர் அட்லீ தான் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
"ஆணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய சினிமா"- சந்திரமுகி நடிகை பளார்!
Surya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com