ஷூட்டிங்கில் காயமடைந்த சூர்யா.. எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
நடிகர் சூர்யா காயமடைந்த பிறகு மனைவி ஜோதிகாவுடன் சென்னை விமான நிலையத்தில் தாங்கி தாங்கி நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் 'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்றது. சூர்யா நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது ரோப் கார் கேமராவில் ரோப் அறுந்து கீழே வந்ததில் சூர்யாவின் தோள்பட்டை மீது உரசி சென்றது. அதன் காரணமாக சூர்யாவின் தோள்பட்டையில் லேசாக அடிபட்டதாக படக்குழுவினர் கூறியிருந்தனர்.
இதையடுத்து சூர்யா தனது காயத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பாக தனது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். காயம் முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் 2 வாரங்களுக்கு சூர்யா ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்தவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கங்குவா படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவை விமான நிலையத்தில் ஜோதிகா அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஓய்வு எடுப்பதற்காக ஜோதிகாவுடன் மும்பைக்கு சூர்யா சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

