ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா! மீண்டும் உண்மை சம்பவமா?

Surya with Jai bhim director
Surya gnanavel image credit:City writters
Updated on

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த கூட்டணி முதன்முறையாக ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக உருவானது. நீண்ட காலத்திற்குப் பிறகு சூர்யாவிற்கு ஜெய்பீம் திரைப்படம் விமர்சன ரீதியிலான வெற்றியை கொடுத்தது. அதேநேரம் இந்த திரைப்படத்தின் மூலம் பல சர்ச்சைகளுக்கும் சூர்யா ஆளாகினார்.

ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து ஞானவேல் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நாயகனாக வைத்து வேட்டையன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் , நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். மஞ்சு வாரியர் ,பகத் பாசில் , ராணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தாலும் , இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதேபோல் ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பின்னர் சூர்யா நடித்திருந்த "எதற்கும் துணிந்தவன், கங்குவா , ரெட்ரோ " உள்ளிட்ட திரைப்படங்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்துள்ள, கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரைப்படம் சூர்யாவிற்கு கம்பேக்காக அமைந்துள்ளது

உலக அளவில் கருப்பு திரைப்படம் 5 நாட்களில் ₹161 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படம் ₹100 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இதற்கு முன்னர் சூர்யாவின் திரைப்படம் எதுவும் ₹161 கோடி ரூபாய் வசூலை நெருங்கியதில்லை. சூர்யாவின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

தற்போது சூர்யா , வெங்கடேஷ் அட்லூரியின் இயக்கத்தில் ​'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்ற பன்மொழி படத்தில் நடித்து வருகிறார் , இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்து உள்ளார். இந்த திரைப்படத்திற்குப் பின்னர் மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற ஆவேசம் திரைப்படத்தின் இயக்குனர், ஜித்து மாதவன் இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் 47வது திரைப்படமாக உருவாகும் இது முழுக்கவும் நகைச்சுவை கலந்த, அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்த திரைப்படங்களையும் முடித்த பின்னர் சூர்யா, ஞானவேல் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை பகுதியில் வாழ்ந்த மருத்துவர். திருவேங்கடம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர். திருவேங்கடம் தன் வாழ்நாள் முழுக்க ₹5 கட்டணம் மட்டுமே, பெற்றுக் கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் திரைக்கதையின் மூலம் மீண்டும் சூர்யா, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com