தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளாவிலும் பரவலான ரசிகர்களை கொண்டுள்ளார்.
விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் 200 கோடியை தாண்டி வசூலித்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படம் தொடர்பான மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படம் குறித்த அப்டேட்டை இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறி இருந்தார்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் விஜய்யின் தளபதி 67-ம் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்கிற தகவல் கடந்த ஆண்டு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் அப்டேட் எப்ப வரும் என கேட்டதால், டுவிட்டரில் இருந்தே வெளியேறிய லோகேஷ் கனகராஜ், தளபதி 67 அப்டேட் உடன் தான் மீண்டும் டுவிட்டரில் எண்ட்ரி கொடுப்பேன் என கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
இந்தப்படத்தின் முறையான அறிவிப்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று மாலை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் மதிப்புமிக்க ப்ராஜெக்ட்டை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மாஸ்டர் மற்றும் வாரிசு படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக இணைகிறோம். இந்த படத்திற்கு 'தளபதி 67' ஒர்கிங் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். எஸ். எஸ். லலித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிச்சாமி இடம்பெற்றுள்ளார்.
ஜனவரி 2, 2023 அன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர்.
கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் படத்தில் இணைகிறார்.
தளபதி 67 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குழு பின்வருமாறு-
ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, சண்டைப்பயிற்சி அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை சதீஷ்குமார், நடனம் தினேஷ், வசனம் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி, எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் ராம்குமார் பாலசுப்பிரமணியன். தளபதி 67 படத்தின் நடிகர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.