
இந்திய அளவில் பாலிவுட் சினிமாவுக்கு தனி மவுசு உண்டு. ஆனால் சமீப காலங்களில் தென்னிந்திய சினிமாக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் சில படங்கள் இந்திய அளவில் பேசப்படுகின்றன. அதோடு தமிழில் பாலிவுட் நடிகைகளும் நடிக்கத் தொடங்கி விட்டனர். மேலும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். அதில் ஒரு நடிகையைத் தான் கோலிவுட்டின் கரீனா கபூர் என பிரபல இயக்குநர் பாராட்டினாராம். யார் அந்த நடிகை, வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், ஜீ, சண்டக்கோழி, பையா மற்றும் வேட்டை உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, சினிமாவைக் கற்றுக் கொண்டார். மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடிப்பில் வெளியான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் லிங்குசாமி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவரது திரைப்பயணத்தில் முக்கியத் திருப்பமாக அமைந்தது பையா திரைப்படம்.
கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படத்தில், முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின் தமன்னா கிடையாதாம். கடைசி நேரத்தில் ஒப்பந்தமானவர் தான் தமன்னா என சமீபத்தில் லிங்குசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பையா திரைப்படத்தில் கார்த்தியுடன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தான். எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்பாக, எனக்கும் நயன்தாராவுக்கும் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பையா திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டார். அதன்பிறகு தான் தமன்னா நடிகையாக ஒப்பந்தமாகி நடிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு ஏறக்குறைய 20 வயது தான் இருக்கும். ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விடுவார். தமன்னா நேர்மையான பெண்ணும் கூட. நீ வருங்காலத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மாதிரி தமிழில் ஜொலிப்பாய் என நான் அப்பொழுதே அவரிடம் கூறியிருந்தேன். அதன்பிறகு அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும் போது அபரிமிதமாக உள்ளது” என லிங்குசாமி தெரிவித்தார்.
நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் அதிக காலம் சினிமாவில் நிலைப்பதில்லை. பெரும்பாலும் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதே இல்லை. அப்படியே நடித்தாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள், முன்பை விட மாறுபட்டதாக இருக்கும். ஒரு நடிகை சினிமாவில் சாதிக்க, நடிகர்களைக் காட்டிலும் குறைந்த காலமே உள்ளது. அவ்வகையில் தனக்ககு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நடிகை தமன்னா, இன்று முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.
இயக்குநர் லிங்குசாமி சொன்னது போலவே, பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் தனது முத்திரையைப் பதித்து விட்டார் தமன்னா. இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பான் இந்திய அளவில் ஹிட் அடித்த பாகுபலி திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் அயன், பையா, சிறுத்தை, வேங்கை, ஸ்கெட்ச், வீரம், தர்மதுரை மற்றும் அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.