திரையுலகில் மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ் திரையுலகில் மூத்த திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
Actor Rajesh
Actor Rajesh
Published on

தமிழ் திரையுலகில் மூத்த திரைப்பட நடிகர் ராஜேஷ் இன்று தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோ ரோல் முதல் குணச்சித்திர நடிகர் வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். 'ரோஜா', 'சூர்யவம்சம்' உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் தனது நடிப்பு திறமையால் முத்திரை பதித்துள்ளார்.

1974-ல் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட படங்கள் இவரை பிரபலமாக்கியது. ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக வேலை செய்த ராஜேஷ் சினிமா மீது கொண்ட தீராத ஆர்வத்தால் சினிமா துறையில் நுழைந்தார்.

நடிகர், டப்பிங் கலைஞர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜேஷ் சினிமா தவிர்த்து ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸினஸ் போன்ற தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தின் மேல் உள்ள அதீத ஆர்வத்தால் இவர், ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் தனது 50 ஆண்டுகால கலைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தன் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த ராஜேஷ்க்கு, இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சித்தரால் ஞானம் பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்!
Actor Rajesh

இதனை தொடர்ந்து ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com