பாக்ஸ் ஆபிஸில் திணறும் தமிழ் சினிமா!

KOLLYWOOD
KOLLYWOODImg Credit: Gulte
Published on

இந்தியாவில் திரைப்பட தொழில் தொடங்கிய காலத்திலிருந்து முதலிடத்திற்கு கடுமையான போட்டிகள் இருந்தன. முதலில் ஹிந்தி மற்றும் வங்காள படங்களுக்கு இடையே போட்டி இருந்தது. விடுதலைக்கு பின்னர் வங்காள சினிமா தேய்ந்தது.

வங்காளிகள் மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை விட திரைக்கதையில் தங்கள் அறிவைக் காட்ட முயல்வார்கள். வங்காள படங்கள் எளிய நாவல் போன்ற தெளிவான கதையோடு இயல்பான காட்சிகள் நிரம்பிய படமாக இருக்கும். படத்தில் "ஒரு ரயில் வருகிறது என்றால் அதை 2 நிமிடத்திற்கு காட்டுவார்கள். அடுத்ததாக கதாபாத்திரம் நடப்பது மட்டும் 3 நிமிடம் வரும். இப்படியே படம் போய் விடும் ரசிகனும் எழுந்து போய்விடுவான்." என்று வேடிக்கையாக சொன்ன காலமும் உண்டு.

ஆரம்பத்தில் பாலிவுட் காதல் கதைகளை படாமாக்கியது. கோலிவுட் சண்டைக் காட்சிகளைக் கொண்ட ராஜாராணி கதைகளை படமாக்கியது. இரண்டு சினிமாக்களும் நல்ல வரவேற்பை பெற்றன. பாலிவுட் பின்னாளில் அதிரடி சண்டைக் காட்சிகள், மாபியா, முக்கோண காதல் என தனக்கான பார்முலாவை வடிவமைத்து நம்பர் 1 இடத்தை தக்க வைத்தது. கோலிவுட்டும் பின்னாளில் புரட்சி, குடும்பம், காதல், தேசபக்தி, ஆன்மீகம் என அனைத்திலும் ரவுண்ட் கட்டி அடித்தது.

எந்த படமாக இருந்தாலும் படத்தில் 5 பாடல்கள், 4 சண்டைக் காட்சிகள், நிறைய நகைச்சுவை காட்சிகள், சில சென்டிமென்ட் காட்சிகள், கிளைமேக்ஸ் காட்சிக்கு முன் ஒரு பாடலும் இறுதியில் சண்டை காட்சியும் இருக்கும். சண்டைக் காட்சி முடிந்த உடன் கதாநாயகன், நாயகியின் திருமணத்தோடு சுபம் என்று முடிப்பார்கள். படம் முடிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியோடு செல்வார்கள். இது தான் தமிழ் சினிமாவின் வெற்றி ஃபார்முலா.

இதையும் படியுங்கள்:
அன்று ஏழு அதிசயங்கள்… இன்று ஏழு மாநிலங்கள் – ஆயுதத்தை கையில் எடுத்த ஷங்கர்!
KOLLYWOOD

நீண்ட காலமாக இரண்டாவது இடத்தில் இருந்த கோலிவுட் 90களில் ரோஜா திரைப்படம் மூலம் பான் இந்தியா திரைப்படங்களாக மாறியது. பாகுபலிக்கு இரு தசாப்தங்களுக்கு முன்பே 5 மொழிகளில் வெளியாகி ரோஜா தேசிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக காதலன், இந்தியன், மின்சாரக் கனவு, பம்பாய், ஜீன்ஸ், முத்து, சிவாஜி, எந்திரன்,2.0 வரை மெகா ஹிட்கள் கொடுத்து அவ்வப்போது பாலிவுட்டை மிஞ்சி நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. பான் இந்தியா படங்களின் முக்கிய காரணம் AR.ரஹ்மான் இசை என்றால் மிகையல்ல. 

பாகுபலி படத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகம் விஸ்வரூபம் எடுத்தது. பாகுபலி 2 மொத்த பாலிவுட் வசூலை அடித்து நொறுக்கியது. அந்த நேரத்தில் தங்கல் படம் சீனாவில் 1000 கோடிகளை வசூல் செய்ததாக திடீர் என்று கூறி முதல் இடத்தை பாலிவுட் வைத்துக் கொண்டது. அதன் பிறகும் பாலிவுட்டால் பாகுபலி 2 ஆம் பாக வசூலை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் கடைசி இடத்தில் இருந்த கன்னட படங்கள் கூட 1000 கோடி மார்க்கெட்டை தொட்டு விட்டன.

ஒரு காலத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்த கோலிவுட் இந்த வருடம் 100 கோடி வசூலை ராயன் படத்தின் மூலம் தொடவே 8 மாதங்கள் ஆகியது. கடைசியாக விஜயின் கோட் படம் 450 கோடி வசூலை தொட்டாலும் படத்தின் பட்ஜெட் 400 கோடிக்கும் மேல். ஆனால், ஒரு பிரபல நடிகர் கூட நடிக்காத மஞ்சுமல் பாய்ஸ் மலையாளப் படத்தின் வசூல் 242 கோடி, லாபம் மட்டும் 222 கோடி.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 பலத்த அடி வாங்கியது. இரண்டரை மணி நேரம் மகிழ்ச்சிக்காக திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களின் மீது சுயசார்பு கருத்து திணிப்புகள் அவர்களை சோர்வடைய செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
அட்லீயுடன் கைகோர்க்கும் பாலிவுட் மற்றும் கோலிவுட் ஸ்டார்கள்!
KOLLYWOOD

கோலிவுட் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வசூலை தரும் என்று நம்பாமல் திரைக்கதை சுவாரசியத்திலும் அதன் உருவாக்கத்திலும் கவனத்தை செலுத்த வேண்டும். சுவாரசியமான திரைப்படங்களை எடுத்து மீண்டும் தனது இடத்தினை தமிழ் சினிமா பிடிக்க வேண்டும். பிடிக்குமா? அது நடக்குமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com