இசை நிகழ்ச்சியால் குளறுபடி.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் ஆதரவு!

AR rahman
AR rahmanIntel

சை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது என திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

சென்னை பனையூரில் நீண்ட நாட்களாக காக்க வைத்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சென்னை பெருநகர காவல் துறை தரப்பில் முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், கச்சேரியை காண சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் பனையூர் நோக்கிப் படையெடுத்தனர்.

ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன.

இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் இசை கச்சேரியை காண வந்தவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் உச்சக்கட்டமாக கொந்தளித்தனர். இதற்கான முழு பொறுப்பையும் ஏற்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளை வைத்து சிலர் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜா கவலை தெரிவித்துள்ளார். மேலும், ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு யோசித்துவிட்டு பேச வேண்டும் என்றும் கதீஜா ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத நிகழ்வு எனவும், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்கொண்ட பிரச்சனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் ரசிகர்களின் ஈர்ப்பை உணராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மனித நகரம், நகர மனிதம்.. கவனம் ஈர்க்கும் இசையின் காலமே வாழ்க என பதிவிட்டு இயக்குனர் சீனு ராமசாமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு பிரபலங்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com