நடன கலைஞரும், நடிகருமான சதீஷ் இயக்கத்தில், ப்ரீத்தி அஸ்ரானி, கவின் பிரபு, தேவயானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் கிஸ். காதல் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுத்து ஒதுக்கும் குணம் கொண்டவர் ஹீரோ கவின்.
ஹீரோயின் ப்ரீத்தி மூலமாக ஒரு பழங்கால புத்தகம் கிடைக்கிறது. இந்த புத்தகம் வந்த பிறகு சில காதல் ஜோடிகளை பார்க்கும் போது அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கும் பிரச்சனைகள் கவினின் ஆழ் மனதில் தெரிய வருகிறது.
இதை எப்படி சரி செய்வது என தெரியாமல் பேராசிரியராக இருக்கும் பிரபுவை அணுகுகிறார் கவின். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே ப்ரீத்தி தன் காதலை கவினிடம் வெளிப்படுத்துகிறார். மனதுக்குள் கவினுக்கு ப்ரீத்தி மீது காதல் இருந்தாலும் ஆழ்மனதில் ஏற்படும் உள்ளுணர்வால் ப்ரீத்தியின் காதலை ஏற்க மறுக்கிறார். கவினின் பிரச்சனை தீர்ந்ததா? கவின் ப்ரீத்தியின் காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பதை கிஸ் சொல்கிறது. பேன்டசி (Fantasy ) காட்சிகளுடன் தொடங்கும் இப்படம் சமகால காதல் பிரச்சனைகளை நோக்கி நகர்கிறது.
Fantasy காட்சிகளைவிட சம கால காட்சிகள் சிறப்பாக உள்ளது. படத்தின் முதல் பாதி சாதாரணமாக இருந்தாலும் இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது. கவின், ப்ரீத்தி இருவரின் நடிப்பை பார்க்கும்போது ஒரு லைவ் காதலர்கள் கண் முன் தெரிகிறார்கள். ஜென் மார்ட்டினின் இசை காதல் உணர்வுகளை சரியாக கடத்துகிறது.
பாடல் வரிகள் இல்லாமல் ஒரு நடன காட்சியை காட்சிப்படுத்திய விதமும், இதற்கான பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவில் செய்துள்ள லைட்டிங் காதல் உணர்வை நமக்கு உண்டாக்கி விடுகிறது. சில இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதையை தனது நகைச்சுவையால் பேலன்ஸ் செய்து விடுகிறார் VTV கணேஷ்.
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் ஒரு இளைஞனை காப்பாற்ற இவர் செய்யும் காமெடியில் அரங்கமே சிரிக்கிறது. டாடா படத்திற்கு பிறகு கவினுக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கதை. மனதில் காதலை வைத்துக் கொண்டு ஏற்க மறுக்கும் இடத்தில் கவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.
ப்ரீத்தி நடனத்தையும் நடிப்பையும் உணர்ந்து தந்திருக்கிறார். அம்மாவாக தேவயானி காமெடி - எமோஷன் இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். கடத்தல், வன்முறை, திரில்லர் என்று இருக்கும் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் காதல் திரைப்படமாக கிஸ் வந்துள்ளது என உறுதியாக சொல்லலாம்.
கிஸ் - காதலை விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.