

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார். ராதிகாவின் நடிப்பில் தாய் கிழவி படமும், சரத் குமார் நடிப்பில் ஆழி படமும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.
1. தாய் கிழவி: பெண் சுதந்திரம் பேசும் வாழ்வியல் காவியம்!
ரேட்டிங்: 3.5/5
கடந்த 1993 ஆம் ஆண்டு கிழக்கு சீமையிலே என்ற படத்தில் விருமாயி என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார் ராதிகா அவர்கள் . இதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராம பின்னணியில் பவுனுதாய் என்ற கேரக்டரில் தாய் கிழவி என்ற படத்தில் நடித்துள்ளார் ராதிகா.சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
படத்தின் ப்ரோமோஷன்களில் ராதிகா முன் நிறுத்தப்பட்டாலும் படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், இறுதி காட்சிகளிலுமே ராதிகா வருகிறார். இடைப்பட்ட காட்சிகளில் படுத்த படுக்கையாக இருக்கிறார். இவரது உடல் மொழியும், தமிழும் பவுனு தாய் கேரக்டரை முழுமையாக வெளிப்படுத்த வில்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் பெண் சுதந்திரம் பற்றி ராதிகா பேசும் இடம் நன்றாக உள்ளது. சரி படத்தின் கதை என்ன?
மதுரை செக்கானூரணி பகுதியில் வட்டி தொழில் செய்து வாழ்ந்து வருபவர் பவுனுதாய் (ராதிகா), திடீரென ஒரு நாள் பக்கவாதத்தால் வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் பவுனு தாயின் மூன்று மகன்களுக்கும் தனது அம்மா நூற்றி ஐம்பது பவுன் நகைகள் சேர்த்து வைத்திருப்பதாக தெரிய வருகிறது. இதை எப்படியாவது தெரிந்து கொள்ள தனது அம்மாவை பேச வைக்க முயற்சி செய்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை. உடல் நிலை இன்னும் மோசமாக செல்கிறது. மதுரையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து தனது தாய்க்கு சிகிக்சை அளிக்கிறார்கள். பவுனு தாய் பிழைத் தாரா? மகன்களுக்கு நகை கிடைத்ததா என்று சொல்கிறது மீதிக்கதை.
பிளஸ் பாயிண்ட்ஸ்:
படத்தின் முதல் பாதி மிக சாதாரணமாக செல்கிறது. படத்தின் இரண்டாம் பாதி வேறொரு தளத்திற்கு சென்று நம்மை ரசிக்க வைக்கிறது. " பெண் சுதந்திரம் என்பது, பொம்பளைங்க பிடிச்ச பொழைப்ப பண்றதுதான் " என்று பெண் சுதந்திரத்தை பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
படத்தின் டைட்டில் ராதிகாவை முன்னிலை படுத்தினாலும் கதை படத்தில் வரும் மற்ற கேரக்டர்களை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகன்களாக வரும் அருள் தாஸ், சிங்கம் புலி, பால சரவணன் இந்த மூவரின் வழியே கதை நகர்கிறது. மூவருமே மிக மிக சிறப்பான நடிப்பை தந்துள்ளார்கள். கமல் ரசிகராக வரும் சிங்கம் புலி நகைச்சுவையில் அதகளம் செய்து விடுகிறார். வயது நாற்பதை தாண்டி திருமணம் ஆகாமல் இருக்கும் முனீஸ்காந்த் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். மகளாக நடித்தவர், குடிகாரர், மருத்துவர்கள் என அனைவரும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
மைனஸ் பாயிண்ட்ஸ்:
இந்த படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. ராதிகா முதன்மைப்படுத்தப்பட்டாலும், அவர் பெரும்பாலான நேரங்களில் படுத்த படுக்கையாகவே வருவது ரசிகர்களுக்கு சோர்வைத் தருகிறது. அவரது உடல் மொழியில் மதுரைத் தமிழ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
இறுதியில்,பெண் விடுதலை என்பது ஆடைகளில் இல்லை, ஒரு பெண் தனக்கு விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து செய்வது தான் உண்மையான பெண் விடுதலை என்று உரக்க சொன்ன இந்த தாய் கிழவியை குடும்பத்துடன் ரசிக்கலாம். வரும் மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்திற்கு ஒரு வாரம் முன்பு இப்படம் வெளியாகி உள்ளது கூடுதல் சிறப்பு.
2. ஆழி: தொழில்நுட்பம் சூப்பர்.. கதை?
ரேட்டிங்: 2.5/5
சரத்குமார் நாகர்கோயில் பகுதியில் ஒரு தாதாவாக இருக்கிறார். இவரது மகளை இந்திரஜித் ஜெகதீஸ் காதலிக்கிறார். இது பிடிக்காத சரத்குமார் இந்திரஜித் ஜெகதீஷை நடு கடலுக்கு உள்ளே தனது போட்டிற்கு கடத்தி சென்று சித்தரவதை செய்கிறார். இங்கே இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் இந்திரஜித். முடிவில் இந்த ஆழியில் இருந்து இந்திரஜித் தப்பித்தாரா? என்பதே 'ஆழி' சொல்லும் கதை..
படம் ஆரம்பம் வித்தியாசமாக தொடங்குகிறது. போகப் போக இதை தக்க வைக்க தவறி விடுகிறது. வசனங்கள் அதிகம் இல்லாமல் இருவரை மட்டுமே காட்டுவது அயற்சியை ஏற்படுத்துகிறது. சரத்குமார், இந்திரஜித் இருவரில் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்வது இந்திரஜித் தான். ஹீரோயின் ஆரம்ப காட்சிகளில் வருவதோடு சரி.
சின்ன சின்ன கடல் மற்றும் போட் சப்தங்களை மிக நுணுக்கமாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி ஆனந்த் கே. நாயரின் ஒளிப்பதிவில் முதல் காட்சியில் கடல் நடுவே இருக்கும் படகை காட்டும் விதம் மிக பிரமாதம். இந்த படத்தின் டைரக்டர் மாதவ் ராமதாஸ் இது போன்ற தொழில் நுட்பத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கதைக்கு சிறிதாவது தந்திருக்கலாம். படத்தின் கதையும் வலுவாக இருந்திருந்தால் இந்த ஆழி மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
மொத்ததில் மனைவி ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பெஸ்ட். கணவர் சரத்குமாரின் ஆழி சுமார்.