ஒரே ஸ்கிரீனில் கமல் - ரஜினி! இவர்கள் இணைந்த 17 படங்கள்... பிரிய இதுதான் காரணமா..?

ரஜினி - கமல் காம்போ படங்கள் ஒரு பார்வை!
Rajinikanth and Kamal Haasan
Rajinikanth and Kamal Haasan
Kalki Strip
Kalki Strip

1975 லிருந்து 1985 வரை 11 வருட காலத்தில் ரஜினி, கமல் (Rajinikanth and Kamal Haasan) இருவரும் இணைந்து 14 தமிழ்ப் படங்கள், 2 தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு இந்திப் படம் என மொத்தம் 17 படங்களில் நடித்துள்ளனர்.

அதற்குப்பின் இருவரும் தனி ஹீரோக்களாக வளர்ந்து விட்டதால் ஒரே படத்தில் இனி இணைந்து நடித்தால் இருவருக்கும் குறைவான சம்பளம் தான் கிடைக்கும், எனவே இனி தனித்தனியாக நடிப்போம் என கமல் ரஜினியிடம் கூறவே ரஜினியும் சம்மதித்தார்.

இவர்களின் குருநாதரான இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், தன் இறுதிக்காலத்தில் இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார்; ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே முடிந்துபோனது.

K.Balachander - Rajinikanth - Kamal Haasan
K.Balachander - Rajinikanth - Kamal HaasanImg Credit: Puthiyathalaimurai

1. அபூர்வ ராகங்கள் 1975:

இதில் தான் ரஜினி அறிமுகம். கமல் தான் நாயகன். தன்னை விட வயதில் மூத்த பாடகி ஆன ஸ்ரீவித்யாவை நாயகன் கமல் காதலிப்பார்.பாடகியின் கணவன் ஆக ரஜினி சில காட்சிகள் மட்டுமே வருவார்.ஆனால் ரஜினியின் நடிப்பும் இதில் பேசப்பட்டது.இந்தப்படத்துக்காக கமல் 6 மாதஙகள் மிருதங்கம் வாசிக்கப்பயிற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ரஜினி வரும் 'இண்ட்ரோ' காட்சியில் (Intro Scene), கேட்டை வேகமாகத் திறந்து கொண்டு வர வேண்டும். அதற்காக ரஜினி பல 'டேக்குகள்' (Takes) வாங்கினார். ஆனால், படத்தில் அவர் தோன்றும் அந்தக் காட்சியில் ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.

இன்னொரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், கண்ணதாசன் என்ற பத்திரிக்கையில் என்.ஆர்.தாசன் எழுதிய வெறும் மண் என்ற கதையைத்திருடி விட்டதாக கே.பாலச்சந்தரை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது..கே பாலச்சந்தருக்கு நீதிபதி ரூ.1000 அபராதம் விதித்தார்.

  • அதிசய ராகம்,ஆனந்த ராகம்,அபூர்வ ராகம்

  • கை கொட்டி சிரிப்பார்கள்

  • கேள்வியின் நாயகனே

  • ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்

போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இதில் உண்டு.

சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. கமலுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. வணிக ரீதியாக செம ஹிட் ஆன படம் இது.

2. அந்து லேனி கதா 1976 (தெலுங்கு):

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை 1974 படத்தின் தெலுங்கு ரீமேக் இதுவாகும்.இதில் ரஜினி அதிக காட்சிகளில் வருவார். கமல் கெஸ்ட் ரோலில் வருவார். இதையும் கே.பாலச்சந்தர் தான் இயக்கினார்.

2001-ம் ஆண்டு நடிகை ஜெயப்ரதா ஒரு பேட்டியில், தன் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படம் இது எனக் குறிப்பிட்டிருந்தார்.

3. மூன்று முடிச்சு 1976:

இதில் கமல் நாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். நாயகியான ஸ்ரீ தேவியை நாயகன் கமல் காதலிப்பார். ரஜினி கமலின் நண்பன். ஆனால் பெண்கள் விஷயத்தில் மோசமானவர். இது நாயகிக்குத் தெரியும். நாயகனுக்குத் தெரியாது. இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித் திரைக்கதை.

இப்படத்தில் வரும் "வசந்த கால நதிகளிலே..." என்ற சூப்பர் ஹிட் பாடல் படத்தில் வரும்போது வில்லன் ரஜினி நீச்சல் தெரியாத கமலை படகில் இருந்து ஆற்றில் தள்ளி விட்டு கமலை மூழ்கடிக்கும் ரஜினியின் வில்லத்தனம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.

ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி வாயில் கவ்வும் ஸ்டைல் இதில் தான் ஆரம்பம்.

டீக் ஹை? என்ற பஞ்ச் டயலாக்கும் பிரபலம்.

இது 100 நாள் ஓடிய படம். இதை இயக்கியதும் கே பாலச்சந்தர் தான்.

4. அவர்கள் 1977:

இதிலும் ரஜினி வில்லன் தான். நாயகன் கமல் மற்றும் நாயகி சுஜாதா இருவரும் காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலர்கள் பிரிய நாயகியிடம் வில்லன் ப்ரப்போஸ் செய்வார்.

வில்லனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடக்கும். இதற்குப்பின் தான் வில்லன் ஒரு சைக்கோ என நாயகிக்குத் தெரிந்து அவனை டைவர்ஸ் செய்து விடுவார். இதற்குப்பின் நாயகனுடன் அவர் சேர்ந்தாரா? இல்லையா?என்பது க்ளைமாக்ஸ்.

இப்படத்தில் கமல் பாடும் "ஜூனியர் ஜூனியர்..." பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பொம்மையை வைத்துக்கொண்டு மிமிக்ரி செய்யும் சீன் செம மிகவும் பிரபலமானது.

அந்தக் காலகட்டத்தில் எல்லா ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் இந்தப் பாட்டைப் பாடுவார்கள்.

இது வணிக ரீதியான வெற்றி பெற்ற படம்.

5. பதினாறு வயதினிலே 1977:

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இல்லாமல் கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இது. பாரதிராஜாவின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு, வசனம் கலைமணி, உதவி திரைக்கதை மற்றும் உதவி வசனம் கே. பாக்கியராஜ் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இதில் 'சப்பாணி' என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மிகுந்த துணிச்சலுடன் படம் முழுதும் கோவணம் கட்டிய தோற்றத்தில் நடித்தார்.

இதில் வில்லன் ரஜினி. இவர் பேசும் 'இது எப்படி இருக்கு?' என்ற டயலாக் செம பேமஸ்.

'ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ,ஆனா நாய் வளர்க்கலை.என்னை தான் வளர்த்தா' என கமல் பேசும் சீன் பேசப்பட்டது.

ரூ.5 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம், பிரம்மாண்டமான வெற்றி பெற்றது.மேலும், இத்திரைப்படம் தமிழக அரசின் 5 விருதுகளை வென்று சாதனை படைத்தது.

பாடல்கள் அனைத்தும் ஹிட் :

  • செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா

  • செந்தூரப்பூவே

  • மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு

  • ஆட்டுக்குட்டி முட்டை இட்டு

என பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனது.

6. ஆடுபுலி ஆட்டம் 1977:

இதில் கமல் நாயகன், ரஜினி வில்லன். ஸ்ரீப்ரியா நாயகி. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு, இயக்குநர் மகேந்திரன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.

இது தெலுங்கில் 'எத்துக்கு பை எத்து' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் ஹிட் ஆனது.

7. இளமை ஊஞ்சலாடுகிறது 1978:

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தனர்.

நாயகன் ஒரு அனாதை, வில்லன் ஒரு கம்பெனியின் எம் டி. அதே கம்பெனியில் நாயகனை மேனேஜர் ஆக்குகிறார் வில்லன். நாயகன் ஒரு பெண்ணைக் காதலிக்க, பெண்களிடம் சபலப்படும் குணம் கொண்ட வில்லன் ரஜினி குறுக்கிடுகிறார். இதற்குப் பின் நிகழும் சம்பவங்களே விறுவிறுப்பான மீதித் திரைக்கதை.

  • என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு?

  • ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது...

  • நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா...

  • தண்ணி கருத்திருச்சு...

போன்ற மெகா ஹிட் பாடல்கள் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தன.

இயக்கம் சி வி ஸ்ரீதர். இந்தப் படத்தில் ரஜினியை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் பரிந்துரை செய்தது கமல்ஹாசன்தான் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தகவல்.

8. வயசு பிலிச்சிந்தி 1978:

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தெலுங்கு ரீ மேக் இது. அதே இயக்குநர்.

9. தப்புத்தாளங்கள் 1978:

இதில் ரஜினி தான் கதாநாயகனாகவும், சரிதா கதாநாயகியாகவும் நடித்தனர். கமல்ஹாசன் இதில் ஒரு கௌரவத் தோற்றத்தில் (Guest Role) நடித்திருப்பார்.இயக்கம் கே பாலச்சந்தர்.

தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. கன்னடத்தில் 'தப்பித்த தல' தான் டைட்டில்.

விலைமாதுவான நாயகியை நாயகன் காதலித்து மணக்கிறான். ஆனால் சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ தடுப்பதையும், அதனால் ஏற்படும் போராட்டங்களையுமே இத்திரைப்படம் அழுத்தமாகப் பேசியது.

  • என்னடா பொல்லாத வாழ்க்கை

  • தப்புத்தாளங்கள்...

  • அழகான இள மங்கை...

போன்ற ஹிட் பாட்டுக்கள் உண்டு.

10. அவள் அப்படித்தான் 1978:

இயக்குநர் ருத்ரய்யாவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், அதன் நேர்த்தியான திரைக்கதை அமைப்பிற்காக 'பிலிம் இன்ஸ்டிடியூட்டில்' (Film Institute) இன்றும் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் திரைக்கதை அமைப்பு பிரமாதமாகப் பேசப்பட்டது. இத்திரைப்படம், வணிக ரீதியாகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெறவில்லை என்றாலும், காலத்தால் அழியாத ஒரு காவியமாகத் திகழ்கிறது.

நாயகன் கமல், வில்லன் ரஜினி நாயகி ஸ்ரீப்ரியா.குறும்பட இயக்குநர் ஆன நாயகன் விளம்பர நிறுவனம் நடத்தும் நண்பனின் ஆபீசில் பணி புரியும் நாயகியைக் காதலிக்கிறான். ஆனால் அவர்கள் காதல் கை கூடாது.

இதில் கமல், ரஜினியை விட ஸ்ரீப்ரியாவுக்குத்தான் அதிக நல்ல பெயர். நடிக்க வாய்ப்பும் அதிகம்.அவர் தனது அபார நடிப்பால் நல்ல பெயரையும் பெற்றார். இப்படத்தின் வசனங்கள் பிரமாதமாக இருக்கும்.

இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்றவை:

  • உறவுகள் தொடர் கதை

  • பன்னீர் புஷ்பங்களே

  • வாழ்க்கை ஓடம்

போன்ற ஹிட் பாடல்கள் உண்டு.

தமிழக அரசின் விருதினையும் இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

11. அலாவுதீனும் அற்புத விளக்கும் 1979:

இதிலும் கமல் நாயகன், ரஜினி வில்லன், நாயகிகள் ஜெயபாரதி, ஸ்ரீப்ரியா, இயக்கம் ஐ வி சசி.

பாக்தாத் நகரத்தின் ஆயுதப்படைத் தளபதியான வில்லன் (ரஜினி), அந்த ராஜ்ஜியத்தின் இளவரசியான நாயகியை விரும்புகிறார். ஆனால், இளவரசியோ நாயகனை (கமல்) நேசிக்கிறாள். இவர்களுக்கிடையேயான மோதலில் யார் காதல் நிறைவேறியது என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியானது. முதல் இரண்டு வாரங்கள் நன்றாக ஓடினாலும் இது வெற்றிப்படமாக அமையவில்லை.

12. நினைத்தாலே இனிக்கும் 1979:

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான படம். இதில் கமல், ரஜினி இருவருமே நாயகர்கள். கே பாலச்சந்தர் தான் இயக்கம்.

இப்படத்தில் ஆழமான கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், இதில் இடம்பெற்ற 14 மெகா ஹிட் பாடல்கள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தன.

  • நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்

  • நினைத்தாலே இனிக்கும்

  • பாரதி கண்ணம்மா

  • இனிமை நிறைந்த உலகம்

  • சம்போ சிவசம்போ சிவனே மந்திரம்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்

ஆகிய 7 பாடல்கள் மொத்தப் பாடல்களான 14ல் செம ஹிட் ஆனவை.

இதில் ரஜினி சிகரெட்டை வாயில் தூக்கிப்போட்டு ஸ்டைலாகபிடிப்பதில் பந்தயம் வைப்பார். ஜெயிச்சா செம பிரைஸ் தோற்றால் கட்டை விரல் கட். இந்த சீன் பெரிதும் பேசப்பட்டது.

சிங்கப்பூரில் முழுப்படமும் படமாக்கப்பட்டது.

நாயகர்கள் இருவரும் ஒரு மியூசிக் ட்ரூப் நடத்துபவர்கள். இருவருக்கும் தலா ஒரு காதலி. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாகப் படம் போகும்.

13. தாயில்லாமல் நானில்லை 1979:

கமல், ஸ்ரீதேவி இருவரும் ஜோடியாக நடித்த படம் இது. ரஜினி இதில் கெஸ்ட் ரோல் தான்.

ஏழை விதவைத் தாயைக் காப்பாற்றும் பொறுப்பு நாயகனுக்கு இருக்கிறது. ஜமீன்தார் மகளான நாயகியை நாயகன் காதலிக்கிறார். ஆனால், "உன் அம்மாவைப் பிரிந்து வீட்டோடு மாப்பிள்ளையாக வர வேண்டும்" என நாயகியின் தந்தை நிபந்தனை விதிக்க, அதனை நாயகன் மறுக்கிறார். இதற்குப் பின் நிகழும் உணர்ச்சிகரமான சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

'வடிவேலன் மனசு வெச்சான் மலர வெச்சான்' என்ற மெகா ஹிட் பாட்டு இதில் உண்டு

சாண்டோ சின்னப்ப தேவர் கதை எழுத, ஆர். தியாகராஜன் இப்படத்தை இயக்கினார். திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்தப்படத்துக்காக கமல் பிரெஞ்ச் தாடி வளர்த்தார்.

ரஜினி, கமல், ஸ்ரீதேவி காம்போ கடைசியாக இணைந்த படம் இது.

இதையும் படியுங்கள்:
40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் 'தலைவர்' & 'ஆண்டவர்' - ப்ரோமோ வெளியானது..!
Rajinikanth and Kamal Haasan

14. நட்சத்திரம் 1980:

தெலுங்கின் முன்னணி இயக்குநர் தாசரி நாராயண ராவ் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம் 'நட்சத்திரம்'. இதில் மோகன்பாபு மற்றும் ஸ்ரீப்ரியா இருவரும் ஜோடியாக நடித்தனர்.

ஒரு சினிமா ரசிகன் ஒரு முன்னணி கதாநாயக நடிகையைக் காதலிக்கிறான். வில்லன் நாயகியைக் கொலை செய்ய முயற்சிப்பதை நேரில் கண்ட நாயகன் பின் என்ன செய்தான் என்பது மீதிக்கதை.

இதில் கமல் ,ரஜினி இருவரும் கெஸ்ட் ரோல் தான்

'அவள் ஒரு மேனகை' என்ற மெலோடி சாங்க் செம ஹிட் ஆனது.

இந்தப்படம் பெரிய அளவில் ஓடவில்லை.

15. தில்லு முல்லு 1981:

வில்லன் ஆக நடித்த ரஜினி முதன் முறையாக காமெடி ஹீரோவாக நடித்த படம் இது. கமல் கெஸ்ட் ரோல். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்க, விசு வசனம் எழுதியிருந்தார்.

இந்தியில் வெளியான 'கோல் மால்' (Gol Maal) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் (Official Remake) இதுவாகும்.

நாயகன் அடிக்கடி லீவ் எடுத்து முதலாளியிடம் மாட்டிக்கொள்ள தனக்கு ட்வின்ஸ் பிரதர் இருப்பதாக பொய் சொல்லி சமாளிக்கும் கதை.

மீசை வெச்சா அண்ணன், மீசை எடுத்தா தம்பி என மோசடி செய்வார். ஜோடி மாதவி.

"அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்" என்ற பெயரில் ரஜினி செய்யும் அலப்பறைகளும், அவருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் இடையிலான நகைச்சுவைக் காட்சிகளும் இன்றுவரை 'செம ஹிட்'.

  • ராகங்கள் 16 உருவான வரலாறு

  • தில்லு முல்லு தில்லு முல்லு

போன்ற மெகாஹிட் பாடல்கள் உண்டு.

படம் சூப்பர் ஹிட்.

இதையும் படியுங்கள்:
வசூலில் 'மாஸ்'... ஸ்டைலில் 'கிளாஸ்'! மக்கள் திலகம் காட்டிய 'பாக்ஸ் ஆபீஸ்' வித்தை!
Rajinikanth and Kamal Haasan

16. உருவங்கள் மாறலாம் 1983:

இது ஒரு வித்தியாசமான கதை. எஸ்.வி. ரமணன் திரைக்கதை எழுதி இயக்கிய இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நாயகன் கடவுள் நம்பிக்கை அற்றவர். அவர் முன் கடவுள் சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய உருவங்களில் மாறி மாறித் தோன்றி எதிர் காலத்தில் நடக்க இருப்பதைக் கூறுவார். நாயகனால் அதை மாற்ற முடிந்ததா? என்பது மீதிக்கதை.

'காமனுக்குக் காமன் மாமனுக்கு மாமன்' என்ற மெகா ஹிட் பாட்டு உண்டு

படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுப் பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

17. கிரப்தார் 1985 (ஹிந்தி)

கிரப்தார் என்ற ஹிந்தி சொல்லுக்கு கைது என்று அர்த்தம்.பிரயாக் ராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் அமிதாப் போலீஸ் ஆய்வாளராக (Police Inspector) முதன்மை நாயகனாக நடித்திருப்பார். கமல் ஒரு முக்கிய ரோலில் வருவார். ரஜினி கெஸ்ட் ரோலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருவார்.

இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் 5 கோடி அப்போதே வசூல் செய்து சாதனை படைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com