மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் வெளியான சில பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. அதேபோல் தளபதி விஜயின் ரசிகர்களுக்குப் பிடித்த ‘குஷி’ படமும் மே மாதம் ரீ-ரிலீஸாகவுள்ளது. இந்தப் பழைய படங்கள் ரீ-ரிலீஸுக்கு மத்தியில் சுந்தர் சியின் அரண்மனை படம் ரிலிஸாவது, ஒரு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.
‘3’, ‘வாரணம் ஆயிரம்’ படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ரீ-ரிலீஸ் யுக்தியானது பெரிய வெற்றியையும், வசூலையும் ஈட்டித் தருகிறது என்றே கூற வேண்டும். இதனால், ‘வாலி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘சிவா மனசுல சக்தி’, ‘வடசென்னை’ எனத் தொடர்ந்து பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், தியேட்டர் ஓனர்களுக்குப் பெரிய அளவு வசூலைக் கொடுத்தாலும், இன்னொரு விதத்தில் தமிழ் சினிமா சரிவைச் சந்தித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! பழைய படங்கள் ரீ-ரிலீஸ் அதிகமாகச் செய்யப்பட்டு வருவதிலிருந்து, தியேட்டர்களில் புதிய படங்களே காணவில்லை. இதனால், நல்ல கதைக்களங்களைக்கொண்ட புதிய படங்கள் வெளியானாலும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. புதுப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானப் பிறகு எளிதாக ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்கள். மேலும் சிலர், “ஐயோ… இந்தப் படம் நன்றாக இருக்கிறதே, தியேட்டரில் பார்த்திருக்கலாமே!” என்று சங்கடப்பட்டுக்கொள்கிறார்கள்.
அப்படி ஒரு சூழல்தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தல - தளபதி படங்கள் மோதல் என்று கூறுவார்கள். இப்போது ரீ-ரிலீஸ், நியூ ரிலீஸ் படங்கள் மோதல் என்றுதான் கூறுகிறார்கள்.
அதைவிடவும் ஒரு பெரிய இக்கட்டான சூழல்தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தல - தளபதியின் பழைய படங்கள் சேர்ந்து ஒன்றாக ரீ-ரிலீஸ் ஆகும்போது, புது படம் வெளியாகி ஹிட் கொடுப்பது மிகப்பெரிய சவால்தான். சமீபத்தில் ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதிலிருந்து, அஜித் படங்களின் ரீ-ரிலீஸுக்கு எதிர்பார்ப்புகள் கூடின. அதற்கேற்றவாரு, சரியாக நாளை அஜித்தின் பிறந்தநாளும் வருகிறது. இதுதான் சரியான நேரம் என்று ரீ-ரிலீஸ் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தவகையில் நாளை, அஜித் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘மங்காத்தா’, ‘பில்லா’, ‘தீனா’ ஆகிய மூன்று படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன.
அதேபோல் மே மாதம் விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான ‘குஷி’ படமும் ரீ-ரிலீஸாகவுள்ளது. வாலி படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அறிமுகமான எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு ‘ஹிட்’ படம்தான் ‘குஷி.’ சமீபத்தில் ‘குஷி’ படத்தின் வசனங்கள் இணையத்தில் மீம்ஸ், ட்ரோல்களாக வந்தன. இந்தநிலையில் அதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் ‘குஷி’ படத்திற்குச் செல்லும்.
ஒரு ரசிகர் பட்டாளம் தளபதியின் ‘குஷி’ படத்திற்குச் செல்ல, இன்னொரு ரசிகர் பட்டாளம் ‘தீனா’, ‘மங்காத்தா’, ‘பில்லா’ ஆகிய படங்களுக்கு மாறி மாறிச் செல்ல, நடுவில் வெளியாகும் புதுப்படங்களின் நிலை என்னவாகும்?
அந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம்தான் ‘அரண்மனை 4.’ சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் வரும் மே 3ம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. சிறுவர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘அரண்மனை 4’ படத்திற்குப் பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டதால், அந்த அளவிற்கு எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்கிறது.
‘அரண்மனை 4’ படம் முதலில் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என்று படக்குழு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தது. ஆனால், விஷாலின் ‘ரத்னம்’ படமும் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டதால், ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. ஏனெனில், இப்படம் அதிக எண்ணிக்கையிலானத் திரைகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து படம் மே 3ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. குடும்ப ரசிகர்களை கருத்தில் கொண்டும், விடுமுறை நாட்களைக் கருத்தில்கொண்டும்தான் படக்குழு இந்த முடிவை எடுத்தது.
இப்படி பலவற்றை கருத்தில்கொண்டு வெளியீட்டுத் தேதியைத் தள்ளிப்போட்ட படக்குழு, ரீ-ரிலீஸ் படங்கள் பற்றிய விஷயத்தில் கவனம் செலுத்தாது இப்போது பெரிய சங்கடத்தில் சிக்கியுள்ளது. ஒருவேளை, இத்தனை மோதல்களுக்கும் இடையில் ‘அரண்மனை 4’ படம் நன்றாக ஹிட்டானது என்றால், இதுதான் கோலிவுட் சினிமாவின் கம்பேக் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.