
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
அஜித்துக்கு மங்காத்தா படம் கொடுத்து அசத்திய வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அது ஒருவழியாக தற்போது நிறைவேறி விட்டதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக விஜய் ஆண்டனியின் நடித்த கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார். முன்னதாக விஜய் நடித்த லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் தான் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 68 பூஜை வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் விஜய்யின் எளிமையான சிரிப்பை கண்டு பலரும் அவரை ரசித்து வருகின்றனர். மேலும் பல வருடங்களாக திரைப்படத்தில் நடிக்காத மோகன், பெரும்பாலும் வெளியில் வராத நடிகர் பிரசாந்த் என பலரும் நடிப்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.