விமர்சனம்: பாம் - டமாரா... டமாலா?
ரேட்டிங்(3 / 5)
அர்ஜுன் தாஸ் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பாம்.
கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். ஒரு கிராமம் சாதியின் அடிப்படையில் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சி செய்தும் பயன் இல்லை. இவர்களின் மோதலை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் நாசர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபராக இருக்கும் காளி வெங்கட் இந்த மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். இவரது நண்பர் அர்ஜுன் தாஸ். எதிர்பாராத விதமாக காளி வெங்கட் இறந்து விடுகிறார். இவரது உடலில் சில மாற்றங்கள் தென்படுவதை பார்க்கும் அர்ஜுன் தாஸ் "நண்பன் இறக்க வில்லை" என்கிறார்.
ஆனால் ஊர் ஏற்று கொள்ளாமல் பிணத்தை எரிக்க சொல்கிறது. இந்த சூழ்நிலையில் ஊரில் சிலருக்கு நல்லது நடக்க, இதற்கு காரணம் இறந்த நபர் தான் என்றென்னி ஊருக்கு நடுவே பிணத்தை வைத்து சாமியாக கும்பிடுகிறார்கள். இப்படி செய்தால் பல நாட்கள் காட்சி தராமல் இருந்த 'ஜோதி' தெய்வம் காட்சி தரும் என்று எண்ணுகிறார்கள். இறந்த ஒருவரின் பிணத்தை அடக்கம் செய்யாமல் வைத்திருக்க கூடாது என அரசு எச்சரிக்கை விடுகிறது. பிணத்தை புதைத்தார்களா? இல்லையா? ஜோதி தரிசனம் கிடைத்ததா? என்பது தான் கிளைமாக்ஸ்.
ஜாதி மோதல்கள், தீண்டாமை, நாட்டார் வழக்கியல் என்ற மூன்றையும் ஒரே படத்தில் சொல்லி இருக்கிறார் டைரக்டர். இதை ஒரு பிரசாராமாக இல்லாமல், நல்ல திரைக்கதையில் கிராமிய பின்னணியில் தந்திருக்கிறார். டைரக்டருடன் சேர்ந்து இப்படத்திற்காக மணிகண்டன், அபிஷேக் சபரிஷ்வரன் என்ற இருவரும் திரைக்கதையில் பணியாற்றி உள்ளார்கள். முதல் பதினைந்து நிமிடத்தில் இந்த படத்தின் கதை இதுதான், இது பிரச்சனை என்று சொல்லி விட வேண்டும் என்ற ஹாலிவுட் பாணியில், படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பாட்டி பேரனுக்கு சொல்லும் கதை போல் படத்தின் பிரச்சனையை சொல்லி விடுகிறார்கள்.
படத்தின் முதல் பாதி நார்மலாகவும், இரண்டாம் பாதி மிக சிறப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் மிக அருமையாக இருக்கிறது. தன்னால் தான் தனது நண்பனுக்கு தண்டனை கிடைத்தது என்று வருந்தும் சிறுவன், சிறுவர்கள் கையில் கட்டி இருக்கும் ஜாதி கயிரை தூக்கி எரியும் காட்சி என பல காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
காளி வெங்கட் பிணமாக நடிக்கும் காட்சியில் கூட உயிரோட்டமாக நடித்திருக்கிறார். முதல் முறையாக ஆக்ஷனில் இருந்து கொஞ்சம் மாறி ஒரு அப்பாவியாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். தனது 'சிங்க குரலில் கர்ஜிக்காமல்' அமைதியாக நடித்துள்ளார்.
ஷிவாத்மிகா இதுவரை தமிழில் நடித்துள்ள படங்களில் நடிப்பு திறமையை இந்த படம்தான் முழுமையாக வெளிக்கொண்டு வந்துள்ளது. இயக்குநர் சரியாக பயன்படுத்தி உள்ளார். இமானின் பின்னணி இசையில் ஒரு லைவ் கிராமத்தை பார்த்த உணர்வு கிடைக்கிறது. 'நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள், நாம் வழிபடும் நாட்டார் தெய்வங்களும் ஒன்று தான். இங்கே ஜாதிக்கு என்ன வேலை' என்று கேட்கிறது பாம். சாதி ஆணவ படுகொலைகளும், தீண்டாமை பிரச்சனைகளும் இருக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற பாம் தேவைதான். பாம் - ஜாதிக்கு வைக்கும் வேட்டு!