
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா பயணத்தில் கோமாளி திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்தது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையாம். வேறொரு வளர்ந்து வரும் நடிகராம். யார் அந்த வளரும் நடிகர் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஒரு திரைக்கதையை இயக்குநர் எழுதி முடித்தவுடன், அதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என சிந்தித்துப் பார்ப்பார்கள். அவ்வகையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒரு நடிகரைத் தேர்வு செய்தாலும், அந்த நடிகர் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்தடுத்த நடிகர்களிடம் அந்த திரைக்கதையானது நகரும். இதன்படி கோமாளி படத்தின் கதைக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயம் ரவி இல்லை. அவர் தனது காமெடித் திறனால் சினிமாவில் நுழைந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர். அவர் தான் ஆர்ஜே பாலாஜி.
ஆம், கோமாளி திரைப்படத்திற்கு ஹீரோவாக முதலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் தேர்வானவர் ஆர்ஜே பாலாஜி தான். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார். கோமாளி திரைப்படம் வெளிவந்த காலத்தில் ஆர்ஜே பாலாஜி ஒருசில படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையில் கோமாளி பட வாய்ப்பு கிடைத்தும், அதனை தவற விட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இருப்பினும் அதற்கான முக்கிய காரணத்தையும் அவர் தற்போது கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறுகையில், “கோமாளி படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் என்னிடம் கூறினார். ஆனால் அதற்கு முன்பு வரை நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடித்தது இல்லை. இப்படியான சூழலில் இவ்வளவு பெரிய படத்தில் நான் நடித்தால், அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நான் நிராகரித்தேன். இருப்பினும் கோமாளி மிகப்பெரிய வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி” எனக் கூறினார்.
கோமாளி படம் வெற்றியடைந்ததற்குப் பிறகு கொரோனா வைரஸ் பரவி, எந்தப் படமும் திரைக்கு வர முடியாமல் இருந்தது. அப்போதைய காலத்தில் தான் ஓடிடி தளங்கள் படங்களை வெளியிடத் தொடங்கின. அச்சமயத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு LKG, ர்ன பேபி ரன், வீட்ல விஷேசம் மற்றும் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் நிலைத்து விட்டார். தற்போது இவரது நடிப்பில் சொர்க்கவாசல் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.