“உனக்கு சினிமா முகம் இருக்கு” - பாக்யராஜ் சொன்ன 8 வயது சிறுமி யார்?

Actor Bhagyaraj
Tamil Cinema
Published on

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம். இருப்பினும் இன்று சினாமாவில் சாதித்த பலரும் முதல் வாய்ப்பிற்காக அயராது முயற்சித்தவர்கள் தான். அவ்வகையில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் தனது முதல் வாய்ப்பைத் தேடிச் சென்ற போது, 8 வயது சிறுமியைப் பார்த்து “உனக்கு சினிமா முகம் இருக்கு” என்றாராம். பின்னாட்களில் அதே சிறுமி தான் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். பாக்யராஜ் சொன்ன அந்த சிறுமி யார் தெரியுமா?

சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் பாக்யராஜ். கதை, திரைக்கதை எழுத்தாளர், வசனம், நடிகர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் என பல பரிணாமங்களில் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இவர் சினிமாவில் உதவி இயக்குநராக தனது முதல் பணியைச் செய்தார். 1977 இல் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் பாக்யராஜ்.

உதவி இயக்குநராகும் வாய்ப்பைக் கொடுத்த பாரதிராஜா தான், பாக்யராஜ் நடிகராவதற்கும் வாய்ப்பு கொடுத்தார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அசத்தினார் பாக்யராஜ். இவர் தனது படங்கள் அனைத்திலும் நக்கல் நையாண்டி நிறைந்த காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இதனாலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார். தூறல் நின்று போச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு மற்றும் அவசர போலீஸ் 100 போன்ற பல திரைப்படங்கள் பாக்யராஜின் சினிமா பயணத்தில் வெற்றி விழா கண்ட படங்களாகும்.

பல வெற்றிப் படங்களை இயக்கியும், நடித்தும் தனது முத்திரையைத் தமிழ்த் திரையுலகில் பதித்த பாக்யராஜ், முதல் வாய்ப்பிற்காக பல ஆண்டுகள் முயற்சித்தார். ஒரு சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டு சென்ற போது, அங்கு கோவை சரளாவின் அக்காவும் வாய்ப்பு கேட்டு வந்திருந்தார். அக்காவுக்கு துணையாக வந்த கோவை சரளாவைப் பார்த்த பாக்யராஜ், “நானே இன்னும் சினிமாவிற்குள் வரவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். உனக்கு சினிமா முகம் இருக்கிறது. சினிமாவில் நடித்தால் நீ பின்னாட்களில் பெரிய ஆளாக வருவாய்” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
குணச்சித்திர நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் மதிப்பே இல்லையா?
Actor Bhagyaraj
Kovai Sarala
Cinema Chance

அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து தான் பாக்யராஜிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. இவர் சினிமாவில் இருப்பது தெரிந்ததும், உடனே எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று பாக்யராஜை சந்தித்து சண்டை போட்டாராம் கோவை சரளா. இப்படித் தான் 1982 இல் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானார் கோவை சரளா. அதன் பிறகு இவரது நடிப்புத் திறனால் தற்போது வரை 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்; இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு, துணை நடிகையாக பல படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வருபவர் கோவை சரளா தான். அக்காவின் சினிமா வாய்ப்புக்காக துணைக்குச் சென்றவர், இன்று துணை நடிகையாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தான் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com