ஒரு படத்தை மக்கள் சலிக்காமல் சுமார் 9 வருடங்களாக பார்த்து வருகிறார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம்! 80 கோடி பட்ஜெட்டில் 600 கோடி வசூல் செய்த படம்தான் அது. இப்படம் குறித்துப் பார்ப்போமா?
இந்திய சினிமா வரலாற்றில் ரசிகர்களால் இன்றும் பேசப்பட்டு வரும் படம் என்றால் அது அமீர்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'தங்கல்' திரைப்படம் தான். வெறும் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், உலகளவில் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சரித்திரம் படைத்தது.
இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியது. திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமல்லாமல், ஓடிடி தளத்திலும் வெளியாகி கிட்டத்தட்ட 9 வருடங்களாக மக்கள் சலிக்காமல் பார்த்து வரும் படமாகத் திகழ்கிறது.
'தங்கல்' திரைப்படம் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் உண்மை வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தனது மகள்களான கீதா மற்றும் பபிதா போகத்தை உலகத் தரம் வாய்ந்த மல்யுத்த வீரங்கனைகளாக எப்படி உருவாக்கினார் என்பதே படத்தின் மையக்கரு. பாலினப் பாகுபாடுகளை உடைத்து, பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற சமூகச் செய்தியை இந்தப் படம் அழுத்தமாகப் பதிவு செய்தது.
ஓடிடி தளங்களில் ஒரு படம் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து பிரபலமாக இருப்பது என்பது அரிதான நிகழ்வு. 'தங்கல்' படத்தின் இந்த நீடித்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, படத்தின் அசாத்தியமான கதைக்களம். ஒரு தந்தையின் அர்ப்பணிப்பு, மகள்களின் கடின உழைப்பு, சமூகப் போராட்டங்கள் என உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.
அமீர்கானின் மகாவீர் சிங் போகத் கதாபாத்திரத்திற்கான மெனக்கெடல், மற்றும் கீதா, பபிதா கதாபாத்திரங்களில் நடித்த ஃபத்திமா சனா ஷேக், சானியா மல்ஹோத்ரா ஆகியோரின் சிறப்பான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்.
மேலும், படத்தின் இயல்பான சித்தரிப்பு, எந்த மிகைப்படுத்தலும் இல்லாத திரைக்கதை, மற்றும் தேசப்பற்று உணர்வை தூண்டும் காட்சிகள் ஆகியவை இந்தப் படத்தை ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது.
ஒரு படம் வெறும் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்போதுதான் அது ஒரு கிளாசிக் படமாக மாறுகிறது.
'தங்கல்' அந்த வகையைச் சேர்ந்த ஒரு திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. ஓடிடி தளங்களின் வளர்ச்சி, இந்த மாதிரியான நல்ல தரமான படங்களை மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும், 'தங்கல்' போன்ற படங்கள் நீண்ட காலம் நீடித்திருக்க ஒரு காரணமாகும்.