
கொழுப்பை குறைக்கவும் அழகிய தோற்றம் பெறவும் புத்தரின் கும்பா (Buddha's bowl) உணவு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றைய உணவியலாளர் குறியீட்டு முறையில் அறிவுறுத்துகின்றனர். உணவே மருந்து என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த புத்தத் துறவிகள் உடம்பை யோக சாதனமாக மாற்றினர். இதே முறையை வலியுறுத்தும் நோக்கில் புத்தரின் கும்பா உணவுமுறையை உணவியலார் பரிந்துரைக்கின்றனர்.
நவீன 'புத்தரின் கும்பா'
புத்தரின் கும்பாவில் (பள்ளமான பெரிய கிண்ணத்தில்) இயற்கை உணவான கிழங்கு, காய்கறி, பழங்கள், பயறு போன்ற உணவுகள் அழகுற பல வண்ணங்களில் பிரித்து வைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
இந்த முறையில் ஒருவர் ஒரு பெரிய கும்பாவில் (bowl) ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என்று பல வண்ணங்களில் உணவு வைத்து உண்பதால், சரிவிகித சத்துணவைச் சாப்பிட்டு கெட்ட கொழுப்பு, சர்க்கரை நோய் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பார். தற்காலத்தில் ஆசியா புத்தரின் கும்பா, சிக்கன் புத்தரின் கும்பா என்றும் பல பெயர்களில் உள்ளன.
புத்தரின் கும்பா வரலாறு
புத்தரின் கும்பா என்பது 400 கிலோ எடை உள்ள ராட்சச கும்பா ஆகும். இக்கும்பா திருவோடு அல்ல. ஒரே கரும்பச்சை நிற மரகதப் பாறையைக் குடைந்து செய்யப்பட்டது. சுமார் 6 அடி விட்டமும் அதன் விளிம்பு ஒரு அடி அகலமும் உள்ளது. அடிப்பகுதியில் தாமரை வடிவமைப்புடன் உள்ளது. இது இதன் வெளிப்புறம் பளபளப்பாக உள்ளது. இப்போது காபூல் நகரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
தங்கம், நீலமணி, மரகதக் கல் சிலைகள்
பௌத்தர்கள் தங்கத்தால் சிலை செய்வதில் வல்லவர்கள். நீலமணி மற்றும் மரகதக் கல்லால் சிலை செய்வதில் வல்லவர்கள். நாகர் உருவங்களை நீலமணி கல்லால் செதுக்கினர். மரகதக் கல்லால் கௌதம புத்தரை நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் செய்துள்ளனர். மரகதத்தால் லிங்க உரு செய்து இந்திர வணக்கம் செய்வர். பெண் புத்தரான தாரா தேவியை பச்சை மரகதக் கல்லால் செய்து பச்சை தாரா என்று அழைத்தனர். இன்று இவள் பச்சையம்மன் எனப்படுகிறாள்.
புத்தரின் கும்பா வரலாறு
புத்தரின் மரகதக் கும்பாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் புத்தர் குஷிநாரா என்ற ஊருக்குப் போகும் வழியில் ஒருவர் கொடுத்த இறைச்சியை உண்டதால் வயிற்றோட்டம் (food poison) ஏற்பட்டு இறந்தார். அவர் பயன்படுத்திய கும்பா வைஷாலியில் உள்ள பௌத்த மடாலயத்தில் இருந்தது. அப்பகுதிவாழ் மக்கள் தங்களுடைய முதல் விளைச்சலையும் முதல் கனியையும் இந்தக் கும்பாவின் முன் வைத்து வணங்கிச் செல்வர். இக்காணிக்கை முறை இன்று இந்து கோயில்களாக மாறிய புத்தர் கோயில்களிலும் தொடர்கிறது. சுமார் ஐநூறு ஆண்டுகள் இங்கேயே இருந்தது கப்பப் பொருளான கும்பா.
கிபி முதலாம் நூற்றாண்டில் பாடலிபுத்திராவை வெற்றி கொண்ட மன்னர் கனிஷ்கர், புத்தரின் மரகத ராட்சசக் கும்பாவைக் கப்பமாக எடுத்துக்கொண்டு மொழியியலார் அஸ்வகோசரையும் அழைத்துக் கொண்டு தன் தலைநகர் புருஷபோருக்குத் (பெஷாவர்) திரும்பினார். கி.பி. 3-9 ஆம் நூற்றாண்டு வரை இங்கு வந்த சீன யாத்திரிகர்கள் புருஷபூர் நகரில் புத்தரின் இந்தப் பெரிய கும்பா இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கும்பாவில் குரான் வாசகம்
11ஆம் நூற்றாண்டில் பௌத்தம் அழிந்து இஸ்லாம் அரச மதம் ஆனதும், முகம்மது கஜினி மன்னர் காலத்தில் இந்த கும்பாவில் குரான் வாசகங்கள் எழுதப்பட்டு காந்தஹார் ஜும்மா மசூதியில் வைக்கப்பட்டது. குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டதால் யாரும் இக்கும்பாவை சேதப்படுத்தவில்லை. பின்பு 1980இல் காபூல் அருங்காட்சியகத்திற்கு இடம் மாற்றப்பட்டது.
இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.