

டிரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படம் உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. சான்ட்ரா டிசோசா ராணா தயாரித்துள்ள இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நடித்துள்ளனர் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கதையின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம், இதுவரை பல்வேறு உலக நாடுகளில் திரையிடப்பட்டு 120-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியா மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
தற்போது இந்த படம் வருகிற 21-ந் தேதி தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து படக்குழு கூறும்போது, “கிறிஸ்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் இப்படம் ஆழ்ந்த ஆன்மிக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற கருத்துகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
ராணி மரியாவின் வாழ்க்கை வரலாறு மூலம் மனிதனின் தியாகம், கண்ணியமிகு அன்பு, ஒருமைப்பாடு மற்றும் சாந்தி ஆகிய உண்மைகள் உலகிற்கு வெளிப்படும் விதமாக ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கதை சொல்லும் முறை, இசையமைப்பு, நடிப்பு, மற்றும் காட்சிகளை படமாக்கிய விதம் ஆகிய அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்ததாக பல விமர்சகர்களும் படத்தை பாராட்டியுள்ளனர்.
இந்த திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு முதலில் கேரளாவில் திரையிடப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.